பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

அணியறுபது


பிறவித் துயரங்கள் நீங்கிப் பேரின்பம் பெற. வுரிய வழிகளை இது தெளிவாக விளக்கியுளது. பொருள் நிலைகளையும் குறிப்புகளையும் கூர்ந்து ஒர்ந்து உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஊழின் வழியே உயிரினங்கள் உலாவி வருகின்றன. மனிதன் முன்பு செய்து வந்த செயல்களில் இருந்தே வினை, விதி, ஊழ் என்பன விளைந்து வந்துள்ளன. நல்ல கருமங்கள் நயமான தருமங்களாய் வருதலால் இவற்றை யுடையவர்க்கு ஊழ் உரிமையாய் யாண்டும் இன்பங்களை ஊட்டி யருளுகிறது.

வினைப்பயன்களை நுகர்ந்து கொண்டு வாழும் பொழுதே ஊழின் பழமையை உணர்ந்து கொள்ளவேண்டும். உண்மையை உணர்வதே உயர் ஞானம்.

இந்த உடலை ஈன்றவள் தாய்; உயிரை ஈன்றவன் பரமன். தோன்றி மறைகிற உருவைத் தந்துள்ளமையால் முன் அறி தெய்வமாய் எண்ணி வணங்கும்படி அன்னை முன்னுற நின்றாள்.

கண் கண்ட கடவுளாக நேரே விளங்கியுள்ள தாயின் உள்ளம் உவந்து வரப் பணிந்து பேணி ஒழுகி வருகிற மகன் சிறந்த நன்றியறி வுடையனாய் உயர்ந்து திகழ்கிறான். கடமையைக் கருதிச் செய்பவன் கரும வீரனாகிறான், ஆகவே அரிய உறுதி நலன்களை எளிதே அவன் அடைந்து கொள்கிறான்.

உயிர்க்கு உயிராய் நின்று இயக்கி வருகிற ஆண்டவனை உரிமையோடு எண்ணி வருபவன் நீண்ட புண்ணிய வானாய் நிலவி வருகின்றான்.