பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணியறுபதி

127


இக் கவிகளின் பொருள் நிலைகளைக் கருதியுணர்ந்து உறுதி யுண்மைகளை ஒர்ந்து தேர்ந்து தெளிந்து கொள்ள வேண்டும். அரிய அறிவுடைய மனிதப் பிறவியை அடைந்து வந்தும் உரிய பயனை அடையாமல் ஒழிந்து போவது பெரிய பழியாம்.

செவ்வேள்=முருகக் கடவுள். செந்நிறத் திருவுருவும் என்றும் மாறாத இளமை எழிலும் இணை ஏதுமில்லாத அதிசய அழகும் மருவி அமரர் முதல் யாவரும் விழைந்து வியந்து உவந்து தொழுது துதி செய்து வரத் தோன்றியுள்ளமையால் செவ்வேள் என்னும் திருநாமம் இப் பெருமானுக்கு எவ்வழியும் தனி உரிமையாய் இனிது ஒளி செய்துளது.

அருவும் ஆகுவன் உருவமும் ஆகுவன் அருவும்
உருவும் இல்லதோர் தன்மையும் ஆகுவன் ஊழின்
கருமம் ஆகுவன் நிமித்தமும் ஆகுவன் கண்டாய்!
பரமன் ஆடலை யாவரே பகர்ந்திடற் பாலார்? (1)

வேதக் காட்சிக்கும் உபநிடத் துச்சிக்கும் விரிந்த
போதக் காட்சிக்கும் காணலன்; புதியரில் புதியன்;
மூதக் கார்க்குமூ தக்கவன்; முடிவிற்கு முடிவாய்
ஆதிக்கு ஆதியாய் உயிர்க்குயி ராய்நின்ற அமலன்.

(கந்த புராணம்)


இத்தகைய அமல மூர்த்தியைக் கருதி யுருகி வருவார் பிறவித் துயரங்கள் நீங்கிப் பேரின்ப நிலையைப் பெறுகின்றார். உள்ளம் உருகி வரும் அளவு பேரின்பவெள்ளம் அங்கே பெருகி வருகிறது.