பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணியறுபது

135


பிதற்றித் திரிகின்றனர். அறிய நேர்ந்தவர் பொறி புலன்கள் யாவும் அடங்கி நெறி நியமங்களுடன் அமைதியா ஆன்மானந்தத்தை அனுபவிக்கின்றனர்.

உள்ளம் உரை செயல்
உள்ள இம் மூன்றையும்
உள்ளிக் கெடுத்து இறை
உள்ளில் ஒடுங்கே. (திருவாய்மொழி)


நினைவு சொல் செயல்கள் எல்லாம் அடங்கி மோனமாய்ப் பகவானிடம் ஒடுங்கி நம்மாழ்வார் பரமானந்தத்தை அனுபவித்துள்ளார். அந்த உண்மையை உலகம் அறிய இவ்வாறு உணர்த்தி யுள்ளார்.


ஞான யோகிகளின் மேன்மையான பான்மையாய் மோனம் அமைந்துள்ளமையால் அதன் அதிசய மகிமைகளை ஈங்கு ஓர்ந்து உணர்ந்து கொள்கிறோம்.

மோனம்கை வந்தோர்க்கு முத்தியும் கைகூடும்;
மோனம்கை வந்தோர்க்குச் சித்தியும் முன்நிற்கும்;
மோனம்கை வந்தூமை யாமொழி முற்றுங்காண்;
மோனம்கை வந்தைங் கருமமும் முன்னுமே.(திருமந்திரம் 1611)


மோனத்தின் மகிமையையும் அதனால் விளையும் பேரின்ப நிலையையும் திருமூலர் இவ்வாறு குறித்திருக்கிறார். மோனம் கைவரின் முத்தியும் கைகூடும் என்றது ஈண்டு உய்த்து உணர உரியது.


இந்த மோன நிலை எளிதில் அமையாது: அரிய ஞானமும் பெரிய யோகமும் உற்றவரிடமே உறவா வருகிறது. உரை சுருங்க உணர்வு பெருகுகிறது.