பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146

அணியறுபது


மொழியை வேதமந்திரம்போல் நாளும் ஓதி வரின் ஏதம் நீங்கி ஒழியும்; இன்பம் ஓங்கி வரும்.

55. நல்லதை எண்ணுவதே நன்மனத்துக் கானஅணி;
நல்லதைப் பேசுவதே நாவணி;-நல்லதைச்
செய்வதே தேகத்தின் சீரணி; இம்மூன்றும்
எய்தினார் உய்தி இவண்.

(௫௫)

இ-ள்

நல்ல எண்ணங்களை எண்ணுவதே மனத்துக்கு அழகு; நல்ல வார்த்தைகளைப் பேசுவதே நாவுக்கு அழகு; நல்ல செயல்களைச் செய்வதே உடம்புக்கு அழகு; இவை அமையின் உயிர்க்கு அழகு என்க.

மனமும் வாக்கும் காயமும் இனமாய் ஈண்டு அறிய வந்தன. தினமும் நிகழ்வன சிந்திக்க நேர்ந்தன. மூன்று வழிகளும் வாழ்வின் விழிகள்.

வினைகள் விளைந்து வருகிற தொழில் நிலையங்களாய் இவை இயைந்திருக்கின்றன.

எண்ணமும் சொல்லும் செயலும் நல்லனவாயின் அவை புண்ணியங்களாய்ப் பொலிந்து நின்று எவ்வழியும் இன்ப நலங்களை அருளுகின்றன. தீயனவாயின் பாவங்களாய்ப் பரந்து நின்று யாண்டும் நீண்ட துன்பங்களையே தருகின்றன.

யார்க்கும் இதமே கருதுக; எவரிடமும் இனிமையாய்ப் பேசுக; எங்கும் நலமே புரிக. இவ்வாறு பழகிவரின் அல்லல் யாதும் அணுகாது: நல்ல சுகவாழ்வே எல்லா வழிகளிலும் நண்ணி வரும்.