பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

அ ணி ய று ப து



ஆசையுட் பட்டவர் அல்லற் பட்டவர்;
ஆசையுட் பட்டவர் அளற்றில் பட்டவர்;
ஆசையுட் பட்டவர் அயர்வில் பட்டவர்.;
ஆசையுட் பட்டவர் அரங்கப் பட்டவர். (1)

ஆசை இல்லார்களே அறவர் மேலவர்;
ஆசை இல்லார்களே அருந் தவத்தினர்;
ஆசை இல்லார்களே அருட் கலப்பினர்;
ஆசை யில்லார்களே அரிய முத்தர்கள். (2),

(காசிரகசியம்)

ஆசையுற்றபோது சீவர்கள் படுகிற அவலத் துயர்களையும், அது அற்றபோது அவர்கள் அடைகின்ற ஆனந்த நிலைகளையும் இவை வரைந்து காட்டியுள்ளன. கருத்துக்களைக் கருதிக் காண வேண்டும்.

பாசம்=உயிர் வாசனையான பற்று.

இது அற்றபொழுதான் அந்த உயிர் பிறவித் துன்பங்கள் நீங்கிப் பேரின்பம் பெறுகின்றது.

பாசம் படிந்து வருமளவும் சீவன்தான்
நீசம் படிந்து நிலைகுலைவன்-பாசம்
ஒழிந்த பொழுதே உயர்ஈச னாகி
எழுந்து திகழ்வன் எதிர்.

இதனை நினைந்து தெளிக. உயிர் துயராய் இழிவுறுவதும் உயர்வாய் ஒளி பெறுவதும் எதனால் என்பதை இதனால் உணர்ந்து கொள்ளலாம்.

உலக பாசத்தால் பலவகையான ஆசைகள் படர்ந்து தொடர்ந்து வருகின்றன; அந்த அகப்பற்று ஒழியின் எவ்வழியும் இன்பமே பெருகி வருகிறது.