பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154

அணியறுபது


தன்னை என்றது உயிரை. தலைவனை என்றது உயிர்க்கு உயிராயுள்ள பரமனை. சீவனை அறிய நேர்ந்தபோதே சிவமும் தெரிய வருகிறது. வரவே அதிசய ஆனந்தம் அடைய நேர்கிறான்.

தன்னையும் தனக்கு ஆதாரத்
தலைவனை யுங்கண் டானேல்
பின்னை அத் தலைவன் தானாய்ப்
பிரமமாய்ப் பிறப்புத் தீர்வன்;
உன்னை நீ அறிந்தாய் ஆகில்,
உனக்கொரு கேடும் இல்லை;
என்னை நீ கேட்கை யாலே
ஈதுப தேசித் தேனே.

(கைவல்யம்)

தன்னை அறிபவன் தத்துவ ஞானி
முன்னை அறிபவன் முத்தன்மெய்ஞ் ஞானி
பின்னை அறிபவன் பித்தன்அஞ் ஞானி
அன்னை அறிவன் அளப்பில் பிறப்பனே.

இவை ஈண்டு எண்ணி உணர வுரியன. தத்துவ ஞானம் எத்தகைய மகிமை வாய்ந்தது என்பதை இங்கு உய்த்துணர்ந்து கொள்கிறோம்.

சூரியன் ஒளி தோன்றியவுடன் உலக இருள் அடியோடு மாய்ந்து போகிறது. அதுபோல் ஞான ஒளி தோன்றிய பொழுது உயிரைச் சூழ்ந்திருந்த அஞ்ஞான இருள் முழுதும் அழிந்து ஒழிகிறது.

ஒரு வீட்டுள் எவ்வளவு காலம் இருள் மண்டியிருந்தாலும் விளக்குப் புகுந்தவுடன் அது விரைந்து விலகி ஒழிகிறது; ஒளி எங்கும் பரவி மிளிர்கிறது.