பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160

அணி ய று பது


உயிர், ஆன்மா, சீவன் என்பன ஒரு பொருளன. ஆயினும் வேறு வேறு காரணங்களை மருவியுள்ளன. செயல் இயல்களால் பெயர்கள் நேரினும் உயர் பரமே மூல நிலையமாயுளது.

அரிய பெரிய அந்தப் பரஞ்சோதியிலிருந்து பிரிந்து வந்துள்ள ஒரு சிறு சோதியே சீவன். மாய ம ரு ள் க ள் நீங்கிய பொழுது இந்த ஆன்ம ஒளி பரமான்மாவோடு வெளியில் கலந்து கொள்கிறது. அவ்வாறு கலந்து மகிழ்ந்து கொள்வதையே சீவன் முத்தி என்றும் விதேக முத்தி என்றும் தத்துவநூல்கள் சாற்றி வருகின்றன.

பேரானந்தப் பிழம்பிலிருந்து நழுவி விழுந்த உயிர் மீளவும் அதனைத் தழுவிக்கொண்டால் அன்றி யாண்டும் துன்பங்களே மூ ண் டு தொல்லைகளே நீண்டு என்றும் தொடர்ந்து படர்ந்து அடர்ந்து வரும்.

துயரங்களுக்கு மூலகாரணங்களை உயிர் உணர நேர்ந்தபோதுதான் அஃது உய்ய நேர்கிறது. மெய்யறிவு தெய்வ ஒளியை அருளுகிறது. சித்த பரிபாகம் உற்ற பருவத்தே தத்துவ ஞானம் உதயமாகிறது. ஆகவே மோக மையல்கள் அடியோடு ஒழிகின்றன: ஒழியவே ஏக பராபர ஒளியில் உயிர் இயல்பாய்க் கலந்து கொள்கிறது. அந்தக் கலப்பில் உலப்பில்லா ஆனந்தம் ஓங்கி எழுகின்றது.

குறைவிலா நிறைவே! கோதிலா அமுதே!
ஈறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றே!
மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தென்
மனத்திடை மன்னிய மன்னே!