பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணியறுபது

161


சிறைபெறா நீர்போல் சிந்தைவாய்ப் பாயும்
திருப்பெருந் துறையுறை சிவனே!
இறைவனே! நீஎன் உடலிடம் கொண்டாய்
இனியுன்னை என் இரக் கேனே? (திருவாசகம்)

மாணிக்க வாசகர் சிவபெருமானோடு கலந்துள்ள காட்சியை இது காட்டியுள்ளது, "சிவனே! நீ என் உடல் இடம் கொண்டாய்! இனி யான் உன்னிடம் வேண்ட வேண்டியது யாதொன்றும் இல்லை' என்று குறித்திருத்தலால் சீவபோதம் முற்றும் அற்றுச் சிவமயமா யுள்ளமை தெரிய வந்தது.


உயிர்ப்பு இல் நிலை=மூச்சு இல்லாத நிலைமை. என்றது மரணத்தை. முடிவு நேருமுன் முடிவான உண்மையை உணர்ந்து உயிர்க்கு உய்தியைச் செய்து கொள்வோரே உயர்ந்த உத்தமராய் ஒளி மிகப் பெறுகின்றார்.


மெய்யுணர்வே தெய்வ ஒளியாய் உய்தியருளுகிறது. அந்த ஒளியே அந்தமில்லாத இன்பம்.


உலகப் புலைகள் யாவும் நிலையில்லாதன. நிலையான உண்மைப் பொருள் ஒன்றே. அது கடவுள் இறைவன் ஈசன் சிவன் பரமன் பிரமம் எனப் பல பேர்களால் பலவாறு பேசப்படுகிறது. பரஞ்சோதியான அந்தப் பேரொளியிலிருந்து சிதறிய சிறிய ஒளித்துளியே உயிர் என உடம்புள் உறைந்துள்ளது. இந்த உறவுரிமையை உணர்ந்து தெளிந்தால் பிறவித் துயரங்கள் பெயர்ந்து போம். பேரானந்த நிலை நேரே விரைந்து பெருகி வரும்.


21