பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



30

அணியறுபது


உயிர்க்குக் கண்ணா யுள்ளது உள்ளம். அதை மாசு படியாமல் பாதுகாத்து வருபவன் மகானாய்த் தேசு மிகுந்து சிறந்து வருகிறான்.

கண்ணுடியில் அழுக்குப் படிந்தால் எந்த ஒளியும் அதில் தோன்றாது. மனத்தில் அழுக்குப் படிந்தால் எல்லா நன்மைகளையும் அது இழந்து விடுகிறது. அகத்தில் அழுக்கு அற்ற போதுதான் மனிதன் இகத்தில் மகத்துவம் மிகப் பெறுகிறான்.

கற்றதம் கல்வியுங் கடவுட் பூசையும்
நற்றவம் இயற்றலும் நவையில் தானமும்
மற்றுள அறங்களும் மனத்தின் பால்அழுக்கு
அற்றவர்க் கேபயன் அளிக்கும் என்பரால்.

(காசிகண்டம்)

மனத்துய்மை எத்தகைய மகிமை யுடையது: எவ்வளவு பாக்கியங்கள் நிறைந்தது! என்பதை இதனால் இனிது அறிந்து கொள்கிறோம்.

மனம் புனிதம் ஆனால் அந்த மனிதன் தெய்வம் ஆகிறான். உய்தி யாவும் உளவாகின்றன.

சத்தியத்தால் வாய் புனிதம் உறுகிறது. தருமத்தால் செல்வம் சிறப்படைகிறது; அரிய தவசிகளால் வனம் வனப்பு மிகுகிறது; தத்துவ ஞானத்தால் அருந்தவர்கள் சிறந்து திகழ்கின்றனர். தூய்மை முதலியன தோய்ந்து மனிதர் உயர்ந்து கொள்ள வேண்டும். சித்த சுத்தி தெய்வீக சத்தியாய்ச் சிறந்து திகழ்கிறது. இந்த அதிசய நிலையைப் பெற்றவனை உலகம் துதி செய்து தொழுது வருகிறது. சிந்தை தெளியவே சீவன் சிவனாகிறான்.