பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

அணியறுபது

கள்ளம் கபடுகள் தோயாத உள்ளமே நல்ல தாய் நலம் பல தருகிறது. வஞ்சம் படியின் அந்த நெஞ்சம் நஞ்சம் படிந்ததாய் நாசமே யடையும்.
செம்மையான நீர்மை யுடையதே நேர்மை. இந்தச் சீர்மை செறிந்துள்ள நெஞ்சம் எவ்வழியும் சிறந்து வருதலால் இதற்கு அது அழகு என அமைந்தது. மனம் செம்மையானால் மகான் ஆகிறான்.


கண் காது முதலிய அறிகருவிகள் ஐந்தும் பொறிகள் என வந்தன. இவை வெறி கொண்டு திரியாமல் அடங்கியிருந்தால் அந்த மனிதன் அதிசய மகிமைகளை நன்கு அடைந்து கொள்கிறான்.

மெய்வாய்கண் மூக்குச் செவிஎனப் பேர்பெற்ற
ஐவாய வேட்கை அவாவினைக்-கைவாய்க்
கலங்காமல் காத்துய்க்கும் ஆற்றல் உடையான்
விலங்காது வீடு பெறும்.

(நாலடி 59)


பொறி ஐந்தும் அடக்கினவன் பேரின்ப வீடு பெறுவான் என இது குறித்துள்ளது. நெறி நின்று பொறிகள் ஐந்தும் வென்றவரே அதிசய வீரராய் உலகம் துதி செய்து தொழுது வர விளங்குகின்றார்.


நேர்மையும் அடக்கமும் வீரமும் மானமும் மனிதருக்குப் பேரழகுகள் புரிகின்றன: பேரின்பங்கள் தருகின்றன. அவற்றை நன்கு பேணி உயர்க.

உள்ளச் செம்மை உயர்ந்தநல் இன்பங்கள்
வெள்ளம் என்ன விரைந்தருள் செய்யுமே;
கள்ளப் புன்மை கடிய துயர்களே
அள்ளி ஈயும் அறிந்து தெளிகவே.


இதனை உள்ளி யுணர்ந்து உய்தி பெறுக.