பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

அணியறுபது

அழகு; புறங் கூறாமையே உயர்ந்த சிறப்புக்கு அழகு; நிலையில்லாத நிலைமைகளை நினைதலே மெய்யுணர்வுக்கு அழகு; கொடை வள்ளலே புகழ் மொழிக்கு உரிமையான அழகு என்க.

உயிரினங்கள் யாவும் இன்பத்தையே விரும்புகின்றன: துன்பத்தை அஞ்சுகின்றன. ஆகவே எவ்வுயிர்க்கும் யாண்டும் இதம் செய்வது புண்ணியம்: இடர் செய்வது பாவம். பாவங்களுள் கொலை மிகவும் கொடியது. புண்ணியங்களுள் தலை சிறந்தது கொல்லாத அருள் நீர்மையே. ஏகாரம் அதன் உன்னத உயர்வை நன்னயமா விளக்கி நின்றது.

புறம் சொல்லல் என்பது காணாத இடத்தில் பிறரை இகழ்ந்து பேசுதல். இது நீசமான ஒரு ஈனநிலை. இதனைத் தழுவினவர் ஈனராய் இழிவர்.

புறங்கூறிப் பொய்த்துஉயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூறும் ஆக்கம் தரும்.

(குறள் 183)

புறம் கூறி ஒருவன் புலையாய் வாழ்தலினும் விரைந்து செத்து ஒழிவது நல்லது என நாயனார் இவ்வாறு உள்ளம் கொதித்து இரங்கி உரைத்துள்ளார். இதனால் அந்தப் பேச்சு எவ்வளவு நீசம்! எத்துணைப் பாவம்! எத்தகைய துயரம்! என்பதை உய்த்து உணர்ந்துகொள்ளலாம்.

அவன் உயிர்வாழ்ந்திருந்தால் மேலும் மேலும் புலையே பேசி நரகதுயாங்களே நாளும் நீளமா ஈட்டி காசமுறுவன் ஆதலால் சாதல் ஆக்கம் என்றார். சீவர்கள் துயர் உறாமல் உயர்வாய் உய்ய வேண்டும்.