பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணியறுபது

49


ஆசையின் அவல நிலைகளைத் தாயுமானவர் இவ்வாறு கவலையோடு காட்டியுள்ளார். ஆசை அறின் மனிதன் ஈசனை அடைகிறான்; அது படியின் நீசனை யிழிந்து நிலை குலைந்து அழிகிறான்.

நிராசை இன்றேல் தெய்வம் உண்டோ? இந்தக் கேள்வியை யாவரும் நாளும் தம்முள் உசாவி நன்கு சிந்தித்து வரவேண்டும். பிறவித் துயரங்களுக்கெல்லாம் மூலகாரணம் ஆசையே என்பதை அறிய நேரின் அவர் அரிய பெரியராய் உய்ய நேர்கின்றார். உலக வாழ்வுகள் யாவும் பொருளால் நடந்து வருதலால் நிதி மனைவாழ்வார்க்கு அணி என வந்தது. உண்மையான உயிர் வாழ்வுக்கு அணி எது? என்பதை ஈண்டு ஊன்றி உணர்ந்து கொள்ள வேண்டும். வந்த விருந்தினரை ஆதரித்து உணவூட்டி உபசரித்தல் இல்வாழ்வார் கடமை. விருந்தினர் கடமை என்ன? விரைந்து வெளியேறிப் போவதே.

ஒரு பொழுதுதான் விருந்து: மறுபொழுது இருந்து அருந்த நேரின் அது விருந்து ஆகாது.

The first day, a guest; the second, a burden; the third, a pest.

(Laboulaye)

முதல் நாள் விருந்து, மறுநாள் சுமையே; மூன்றாம் நாள் இருந்தால் அது ஒரு கொடிய தொத்து நோயே என இது வித்தகமாய்க் குறித்துள்ளது.

விருந்து முதல்நாள்; மறுநாள் சுமையே; பெருந்துயரம் ஆகும் பிறகு-விருந்திதனை ஒர்ந்துணர்ந்து நீங்கின் உயர்வாம்;
உணர்ந்திலனேல்
ஆர்ந்த பழியாம் அது.

7