பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணியறுபது

55


இம்மையும் நன்றாம் இயல்நெறியும் கைவிடாது உம்மையும் நல்ல பயத்தலால்-செம்மையின் நானம் கமழும் கதுப்பினாய்! நன்றேகாண் மானம் உடையார் மதிப்பு.

(நாலடி, 294)

தன்னையுடையார்க்கு இம்மையும் மறுமையும் மானம் மகிமை தரும் என இது உணர்த்தியுளது. இந்த அரிய நீர்மையை உரிமையுடன் பேணிவருபவர் பெரிய குல வீரராய்க் காண வருகின்றார்.

செல்வம் செருக்கை விளைக்கும் இயல்பினது. அதனை மிகுதியாக உடையவர் தகுதியாய் அடங்கியிருப்பது அரிது. செல்வர் பணிவுடையராய்ப் பண்பு படிந்திருப்பின் எல்லாரும் அன்பு மீதுார்ந்து அவரை மதித்துப் போற்றுவர். பணிவு என்னும் பண்பு அவர்க்கு ஒர் அரிய பெரிய இன்ப அணி.

எல்லார்க்கும் நன்றாம் பணிதல்; அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து.

(குறள், 125)

பணிவுடைமை எவர்க்கும் நல்லதே. ஆயினும் செல்வரிடம் அது அமையநேரின் பெரிய ஒரு தெய்வசம்பத்தை அவர் உரிமையாய்ப் பெற்றவராவார் என்னும் இது ஈண்டு உய்த்து உணர வுரியது.

எண்மை = எளிய தன்மை.

பொருள் இல்லாமையால் அல்லல் அடைய நேர்ந்தாலும் உள்ளம் தளராமல் எவ்வழியும் செவ்வையாய் ஊக்கி நிற்க நேரின் அந்த நிலைமை தலைமையான மதிப்பை யாண்டும் நலமாய் அருளும்.