பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

 அ ணி ய று ப து


உயிர்க்குச் சுகத்தையும், நாடி நயந்து கொள்ளவே அவயவங்கள் கூடியிருக்கின்றன. அங்கங்களைப் பழுதாப் பங்கப்படுத்தாமல் பாதுகாத்து வருபவரே நயமாய்ப் பயனடைந்து வருகின்றனர். உரியகருவிகள் உயிர் வாழ்வின் அரிய துணைகளாய் அமைந்துள்ளன. அவற்றை இனிது பேணுக.

தூய வாழ்வு வாழ நேர்ந்தவர் தீய பழக்கங்களைப் பழகார். புகையிலை, பொடி, சுருட்டு, முதலியன மருளான மயக்கப் புலைகள். தம்மை ஒருமுறை தொட்டவரை அவை ஒட்டிப் பற்றிக் கொள்ளும்.

தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்.

என்பது பழமொழி. இளமையில் பழகியது சாகும் வரையும் விடாமல் பிடித்துக் கொள்கிறது. பொடியை ஒருமுறை முகர்ந்தவன் பின்பு என்றும் பொடியனாய் நின்றுவிடுகின்றன. எல்லாவற்றையும் துறந்த துறவிகளும்கூட மூக்குப் பொடியைத் துறக்கமுடியாமல் மடியில் சுமந்து மருமமாய் மருவி மகிழ்கின்றனர். விட்டவரையும் விடாமல் வீழ்த்தும்.

பொன்னைவிட்டேன், பொருளைவிட்டேன், பூமிமுதல்
யாவையுமே போக விட்டேன்;
மின்னைவிட்ட மனைவியையும் மேலான்
மக்களையும் வெறுத்து விட்டேன்;
தன்னேவிட்டேன் என்றிருக்கும் துறவியரும்
பொடியைமடி தழுவித் தாங்கி
உன்னைவிட்டால் உயிர்விடுவேன் என்றிருப்பார் ::பொடியே! உன் பொடிதான் என்னே?

(இந்தியத்தாய் நிலை, 296)