பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணியறுபது

67


ஆசை உற்றவரது சிறுமையையும். அற்றவரது பெருமையையும் இதனால் அறிந்து கொள்கிறோம். எதையும் வேண்டாதவன் அதிசய பாக்கியவான்; ஆண்டவனே உரிமையுடன் அவன் நேரே அடைகிறான்.

வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை யாண்டும் அஃது ஒப்பது இல். (குறள் 363)

வேண்டாமையின் மகிமையை இது விளக்கியுளது. குறிப்பின் உண்மையைக் கூர்ந்து ஒர்ந்து கொள்பவர் அவாவின்மையின் அதிசய மகிமைகளைத் தேர்ந்து நன்கு தெளிந்து கொள்வர்.

ஆசை இல்லாத உள்ளம் ஈசன் இல்லம்.


20. மரபுக் கணியியல்பு மாறாமை; வாய்த்த
வரவுக் கணிதருமம் வார்தல்;-கரவில்லா
மாட்சி வணிகர்க்கு மாணணி; நீதியுயர்
ஆட்சி அரசுக் கணி.

(உ0)
இ-ள்

உரிய இயல்பு மாறாமை மரபுக்கு அழகு; தருமம் தழுவி வருதல் பொருள் வரவுக்கு அழகு; கரவில்லாத மாண்பு வணிகர்க்கு அழகு; நீதிமுறையான ஆட்சி அரசுக்கு உரிய பெரிய அழகு என்க.

பரம்பரை வழக்கமாய் மருவி வருவது மரபு என வந்தது. உரமான உறுதி நிலை இதில் மருவியுளது.

உலக வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் இந்தப் பழமையான கிழமை படிந்து வருவனவே சிறந்து திகழ்கின்றன. மரபு மாறின் மகிமை மாறி விடும்.