பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணியறுபது

69

 குடியும் அடியோடு அழிந்துபோம் என்பது இதில் முடிவாய்த் தெளிந்து கொள்ள வந்தது.

உழவும் வாணிகமும் உழைப்பு வகைகளில் தலைமையாயுள்ளன. உழவர்கள் விளைத்த விளை பொருள்களை நாட்டு மக்களுக்கு நன்கு பயன் படுத்துபவர் வணிகர்களே. கரவின்றிச் செம்மையாகச் செய்து வருமளவே அவர் நன்மை அடைகின்றனர்.

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்.(குறள் 120)

வணிகர் எவ்வாறு ஒழுக வேண்டும் என்பதை நாயனார் இவ்வாறு உணர்த்தியிருக்கிறார். பிறர் பொருளையும் தம்பொருள் போல் பேணி நேர்மையா வாணிகம் செய்பவரே சீர்மையாய்ச் சிறந்து வருகின்றனர். செம்மையே எவ்வழியும் நன்மையாம்.

நீதிக் காட்சியால் அரசனுடைய ஆட்சி மாட்சி அடைந்து வருதலால் அரசுக்கு நீதி அணி என வந்தது.


21. செலவுக் கணிகணக்கின் சீர்மை; சிறந்த
நிலவுக் கணியினிய நீர்மை;-உலகில்
எவைக்கும் பொருளே இனிய அணி;
என்றும் அவைக்குப் புலவர் அணி. (உக)

இ-ள்

சீரான கணக்கு செலவுக்கு அழகு; இனிய நீர்மை நிலவுக்கு அழகு; பொருளே எவைக்கும் அழகு; புலவரே அவைக்கு அழகு என்க.

பொருளின் வரவைக் கருதி வருதல் போல் செலவையும் சீரோடு எண்ணிச் செய்ய வேண்டும்.