பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

அணியறுபது

அந்தச் செயலுக்கு ஒழுங்காகக் கணக்கு எழுதி வைத்துக் கொள்வதே நல்ல பாதுகாப்பாம்.

ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.

என்பது முதுமொழி. கணக்கோடு எதையும் கருதிச் செய்க என்பதை இது உறுதியாக் காட்டியுள்ளது. வரம்பு உடையது வளமுடையதாம்.

அறிஞர்கள் கூடியுள்ள நல்ல இடத்துக்கே அவை என்று பெயர். கலையறிவில் தலை சிறந்துள்ள புலவர்களாலேயே அது சிறப்பும் சீரும் மிகப் பெறுகிறது. அறம் அருளால், அவை அறிவால் ஆம்.

உரிமையான அழகு தோய்ந்து வரும்_அளவே எந்தப் பொருளும் வளமாய் இனிமை யுறுகிறது.

பகல் பானுவால் ஒளி பெறுகிறது. இரவு சந்திரனால் எழிலுறுகிறது; நாடு நல்லவரால் நலம் அடைகிறது; மனிதர் மதியால் மாண்புறுகின்றனர்: மதிமான்களால் அவை உவகையாய் உயர்கிறது.

விண்ஒளி யான இரவியும் மதியும்
விரிபகல் இரவினே விளக்கும்;
கண்ஒளி யான விழிவழி யாவும்
கண்டுவந்து உயிரெலாம் களிக்கும்;
தண்ஒளி யான கலைமதி யாளர்
தத்துவ ஞானத்தைத் தழுவின்
எண்ஒளி யான இறைஒளி எனவே
எழிலொளி வீசுவர் இனிதே.

சூரியன் சந்திரன் பகல் இரவு கண் உயிர் கலை அறிவு தத்துவ ஞானம் என்னும் இவை அழகின் இனிய ஒளிகளாய் ஈண்டு அறிய வங்துள்ளன.