பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணியறுபது

71

மனிதன் அறிவால் உயர்ந்துள்ளான்; அந்த அறிவு மெய்யுணர்வால் மேன்மை எய்தி யுளது.

கல்வியறிவில் உயர்ந்தவர் புலவர் என நேர்ந்தார். அந்தப் புலமை தலைமையான ஞானத்தோடு சேர்ந்த போதுதான் நிலைமை உயர்ந்து திகழும். வெறும் புலமை வறண்ட புலம் போல் வசையேபடும். மெய்யறிவு மேவாத கலை வெய்ய புலையே.

ஞானம் இலாத புலமை நவையாகி
ஊனம் உறுபுலையாய் ஒயுமே-ஞானமெனும்
தெய்வ ஒளிதான் தினையளவு சேரினும்
உய்தி யுறுமே உயிர்.

உயிர் துயர் நீங்கி உய்யவுரிய ஒளியை ஈண்டு விழி களிப்ப நோக்கி வியந்து கொள்கின்றோம்.

அவைக்குப் புலவர் அணி என்றது அதன் பயனையும் நயனையும் கருதி யுணர வந்தது. தெளிந்த மெய்யுணர்வு எய்திய அறிஞர் வையம் உய்ய நல்லதை நயமாய்ச் சொல்லி அருளுவர் ஆதலால் சபைக்கு அவர் சால்பான அழகு என நின்றார்.

மனைக்குப்பாழ் வாள்நுதல் இன்மை; செல்லும்
திசைக்குப்பாழ் நட்டோரை இன்மை;-இருந்த
அவைக்குப்பாழ் மூத்தோரை இன்மை; தனக்குப்
கற்றறி வில்லா உடம்பு. (நான்மணி 22) [பாழ்.

இதனை ஈங்கு உற்றறிய வேண்டும்.

அறிவு ஒழுக்கங்களால் உயர்ந்த பெரியோர் இல்லாத அவை நவையாய்ப் பாழ் படும் என விளம்பிநாகனார் இவ்வாறு விளம்பியுள்ளார்.