பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

அணியறுபது


அழகு: விளைவின் வளம் மழைக்கு அழகு: விருந்தினரோடு அருந்துதல் உணவுக்கு அழகு. பசியுடன் உண்ணுதல் வயிற்றுக்கு அழகு என்க.

வேண்டிய காலத்தில் வேண்டிய அளவு புயல் பெய்துவரின் விளைவுகள் வளமாய் விளைந்து வரும். அளவு மீறிப் பெய்யினும் பெய்யாது ஒழியினும் பயிர்கள் பாழாம். ஆகவே இயைந்த பெயல் அமைந்த புயல் இங்கே நன்கு எண்ண வந்தன.

வந்தவரது பசியை நீக்குவது புண்ணியம் ஆத லால் விருந்துடன் உண்பது திருந்திய மனை வாழ்க்கையின் சிறந்த கடமையாய் வந்தது.

விருந்தினர் மூத்தோர் பசுசிறை பிள்ளை இவர்க்கூண் கொடுத்தல்லால் உண்ணாரே என்றும்
ஒழுக்கம் பிழையா தவர்.

(ஆசாரக் கோவை)

விருந்து புறத்ததாத் தான்உண்டல் சாவா மருந்து எனினும் வேண்டற்பாற் றன்று.

(குறள், 52)

வருந்தி ஒருவன்பால் மற்றொருவன் வந்தால்
பொருந்தி அகமலர்ந்து போற்றி-விருந்தேற்றுத்
தன்னால் இயன்றளவும் தான்உதவான் ஆகினவற்கு
இன்னா நரகே இடம்.

(பாரதம்)

உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல்.

(நறுந்தொகை)

மாந்தர் உண்ணும் உணவுக்கு அழகு விருந்துடன் உண்ணுதலே; அவ்வாறு உண்ணாது ஒழிதல் இழிவாம் என்பதை இவற்றால் அறிந்து கொள்ளுகி-