பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

அணியறுபது


மையோ? மரகதமோ? மறி
கடலோ? மழை முகிலோ?
ஐயோ! இவன் வடிவுஎன்பதோர்
அழியாஅழகு உடையான்.

(இராமா:2-6-1).

அழகான இந்தக் கவியின் சொல் அழகு. பொருள் அழகு தொடை அழகு நடை அழகு தொனி அழகு முதலிய அழகுகளை எல்லாம் ஓதி ஓதி உள்ளச் செவியாலும் உணர்வுக் கண்ணாலும் ஒர்ந்து கூர்ந்து தெளிபவர் ஆர்ந்த மகிழ்ச்சிகளை அடைந்து அதிசய பரவசராய் வியந்து கொள்வர்.

அரசு முடி துறந்து இராமன் வனவாசம் செய்ய நேர்ந்தான். முதல் நாள் மாலையில் ஒரு சோலையில் வந்து தங்கினான். மறுநாள் விடியுமுன் எழுந்தான். தென்திசை நோக்கி நடந்தான். மனைவியும் தம்பியும் உடன் தொடர்ந்து வந்தனர். அந்த மானவீரன் கானகம் நோக்கிப் போன கருமக் காட்சியை இந்தக் கவி இவ்வாறு மாட்சிமையாக் காட்டியுள்ளது.

அதிகாலையில் எழுந்தவன் சிறிது தூரம் நடந்து வரவே சூரியன் உதய மாயினான். இளங்கதிர்கள் எழுந்தன: செழுஞ்சோதி எங்கும் வீசியது. பால சூரியனிடமிருந்து எழுந்த இளவெயில் பசியகோலத் திருமேனியனை இராமனது மரகத வண்ணத்தில் படிந்தது. படியவே அந்தச் சிவந்த சோதி பசிய சோதியாய் மாறியது; அயல் எங்கும் பச்சை ஒளி பரவி உச்ச நிலையில் ஓங்கியது. அந்த அதிசயக் காட்சியை இங்கே துதிசெய்து காட்டி யிருக்கிறார்.