பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

அணியறுபது

வாழ்ந்து வர ஆட்சிபுரிய உரிய மன்னர் பெருமான் யாவும் இழந்து காட்டுக்குப் போக நேர்ந்தானே? என்று உள்ளம் கரைந்து உருகி யுள்ளமையை ஐயோ! என்பது அறிவித்துளது.

அழியா அழகு உடையான்.

இராமனுக்கு இவ்வாறு அழகான ஒரு பெயரை அருளியுள்ளார். அல்லல் பல அடைந்தும் உள்ளம் தளராமல் அன்று அலர்ந்த தாமரை மலர் போல் முகம் மலர்ந்து வீர கம்பீரமாய் எழில் ஒழுக நடந்து போகின்றான். ஆதலால் அழியா அழகன் என நேர்ந்தான். அதிசய அழகனை இது துதி செய்துளது.

பாவுக்கு அணி ஓரளவு பார்க்க வந்தது.



29.கோலமத யானைக்குக் கொம்பே அணிசிறந்த
நீலமயி லுக்கணிநீள் தோகையே—ஆல
மரத்துக் கணிவிழுதே மானார் தமது
சிரத்துக் கணி கூந்தலே.(உகூ)
                           இ-ள்

கொம்பு மதயானைக்கு அழகு; தோகை மயிலுக்கு அழகு; கிளை விழுதுகள் ஆலமரத்துக்கு அழகு; கூந்தல் மகளிர் சிரத்துக்கு அழகு என்க.

சீவ சிருட்டிகள் யாண்டும் அதிசயமான நீண்ட காட்சிகள் உடையன. உற்ற உறுப்புக்களால் ஒவ்வொன்றும் சிறப்பான மாட்சிகளைப் பெற்றிருக்கின்றன. உரிய நீர்மை அரிய சீர்மையாகிறது.