பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அ ணி ய று ப து

93



30. ஆவுக் கணிபால் அமைதி அலர்மலரும்
காவுக் கணிநிழலின் காட்சியே--மேவுகின்ற
ஊருக் கணியுயர்ந்த மேலோரே ஊருகின்ற
தேருக் கணிகொடியே தேர்.

(ங0)

இ-ள்.

பால் வளம் பசுவுக்கு அழகு; குளிர் நிழல் பொழிலுக்கு அழகு; உயர்ந்த மேலோர் ஊருக்கு அழகு; சீரான கொடி தேருக்கு அழகு என்க.

தேரும் ஊரும் காவும் ஆவும் இன்ன தொடர்பால் சீரும் சிறப்பும் பேரும் பெருமையும் பெறுகின்றன என இவை தெளிவாய்க் குறித்துள்ளன.

வாவி தாமரை வாண்முகம் மலர்ந்துநன் மருங்கில்
காவி சாத்தியுற் பலமெனும் கண்மலர் முகிழ்த்து
மேவி மாதவர் நிகர்ப்பது மின்னனார் குழல்போல்
நாவி மாமணம் கமழ்வது நைமிசா ரணியம்;

(1)

தேனும் தும்பியும் எடுத்தபண் இசைசெவி மடுத்து
மானும் வேங்கையும் ஒருதலைத் துயில்வது மயில்கள்
கான நாடகம் பயில்தரக் கானமா மறைகள்
ஞான யோகிகள் பயில்வது நைமிசா ரணியம்.

(2)

(திருக்குற்றாலப் புராணம்)

இனிய பல வளங்களோடு நைமிசாரணியம் என்னும் குளிர்பூஞ்சோலை எழில் நிறைந்து ஒளி விரிந்து இருந்த நிலையை இது வரைந்து காட்டியுள்ளது.

மேன்மையான குணநலன்களுடைய மேலோர் மேவி உள்ளதே மேலான நல்ல ஊர். அவர் அங்கே இல்லையேல் அது பொல்லாத புலைக் காடே.

நல்லோர் உடையதே நல்லவூர்; இல்லையேல்
பொல்லாத காடே புலே.