பக்கம்:அணியும் மணியும்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

101

துன்பமும் வாழ்வில் காணப்படும் இயல்புகளாகும். இத்தகைய சூழ்நிலையைக் கண்டு உலகில் துன்பமும் கொடுமையும் சூழ்ந்திருக்கின்றனவே என்று உள்ளம் குன்றுவதால் நாம் அடையும் பயன் என்ன? உலகத்தின் இயற்கை அப்படித்தான் இருக்கும் என்ற உண்மையை உணர்ந்து, அதில் இனிமையைக் காணும் பெற்றி வேண்டும் என்று அவர் வற்புறுத்துவது உலகத்துக்கு உணர்த்தும் ஒரு நற்செய்தியாகும்.

அவர் சில காட்சிகளை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். “ஒரு மனையின் கண் மணமுழவு, மற்றோர் இடத்தில் சாப்பறை. காதலரோடு வாழும் மகளிர் பூவணியணிகின்றனர். பிரிந்த மகளிர் வருந்தித் தனிமையுறு கின்றனர். இத்தகைய மாறுபட்ட வாழ்க்கை நிலைகளைப் படைப்புக் கடவுள் பண்பில்லாமல் படைத்து விட்டான். இந்த உலகத்தின் இயற்கை மிகவும் கொடிது; இவ்வியற்கைப் படைப்பில் கொடுமையிருந்தாலும் அதனியல்பை உணர்ந்த வர்கள் எப்படியாவது வாழ்வில் இனிமையைக் காண வேண்டும்” என்று வற்புறுத்துகிறார்.

ஓர்இல் நெய்தல் கறங்க ஓர்இல்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்
புணர்ந்தோர் பூவணி யணியப் பிரிந்தோர்
பைத லுண்கண் பணிவார்பு உறைப்பப்
படைத்தோன் மன்றஅப் பண்பி லாளன்
இன்னா தம்மஇவ் வுலகம்
இனிய காணகஇதன் இயல்புணர்ந்தோரே - 194

என்று உலகத்தின் இன்னாமையை உணர்த்தும் ஆசிரியர் அதனோடு நில்லாமல் இவ்வின்னாமை நிறைந்த உலகில் இனிமையையும் காண்பதில்தான் அறிவுடையோரின் சிறப்பு அமைந்துள்ளது எனச் சுட்டிக் காட்டுகின்றார்.