பக்கம்:அணியும் மணியும்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

விளங்குகிறது இவர் நடை. அதன் சொல்லாட்சியும் திரு. வி. க. வைப் பெரிதும் தாக்கி உள்ளது.

மற்றும் அவர் பத்திரிகைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதால் பல்லாயிரக்கணக்கான வாசகர்களை அவர் கருத்து எட்டவேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது. சிறப்பாகத் தலையங்கங்களைத் தந்து தடைவிடைகளில் கட்டுரைகளை எழுதவேண்டிய சூழ்நிலை அவருக்கு அமைந்தது. எனவே பத்திரிகைத் தமிழை உருவாக்கியதே திரு. வி. க. தான்.

கலைஞனுக்கு வேண்டிய உணர்வும், கவிஞனுக்கு வேண்டிய ஓசையும், பேச்சாளனுக்கு வேண்டிய ஒழுங்கும், அரசியல்வாதிக்கு வேண்டிய ஆவேசமும், அறிஞனுக்கு வேண்டிய தெளிவும் அவர் நடையில் கலந்து இருந்தன.

திரு. வி. க. வின் நடை தனி நடை மற்றவர்களின் நடையினின்று முற்றிலும் வேறுபட்டது. எவ்வகையில் அது வேறுபட்டு இயங்குகிறது என்பது ஆய்வுக்கு உரியது.

அவருடைய வாக்கியங்கள் வினாக்களை எழுப்பி விடை தருவனவாக அமைந்துள்ளன. இஃது அவர் தனிச்சிறப்பு. வினாக்களை எழுப்புவதால் மற்றவர்களை அவை சிந்திக்கத் தூண்டுகின்றன. சிந்தனைகளைத் தூண்டிப் பின் அறிவு விளக்கம் தருகிறது. பசியை எழுப்பிப் பின் உணவினைத் தரும் பொழுது அது சுவைக்கிறது. உணர்வுக்கு ஊட்டமும் தருகிறது. அவருடைய வாக்கியங்கள் முன்னிலையாரை விளித்துக் கூறும் நேர்முக வாக்கியங்களாகும். அவர் சொல்ல விரும்பும் செய்திகள் வேகமாக வெளிப்பட்டுத் தக்க சொற்களைத் தேடி ஆற்றொழுக்காக வெளிப்படுகின்றன. எழுத வேண்டும் என்ற அவசியம் அவருக்கு இல்லை; பேச வேண்டும் என்ற ஆர்வமே அவரது எழுத்தில் தலையோங்கி நிற்கிறது. சுற்றிவளைத்துப் பேசும் படர்க்கை வாக்கியங்களை அவரிடம் காணமுடியாது.