பக்கம்:அணியும் மணியும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

சொல்லின்பம் உண்டாதலோடு கருத்தும், ஆழமாகப் பதியும் என்ற கருத்தால், அவர் இவ்வாறு ஒலியமைப்பிலும் சுருக்கத்தை எடுத்தாண்டுள்ளார் எனலாம்.

இதைப் போலவே, 'குழலினிது யாழினிது என்ப தம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்' என்ற குறளில் ழகர எழுத்தையும், குழல் யாழ் மழலை போன்ற சொற்களையும் அமைத்துக் குழந்தையின் மழலைச் சொல்லை நம் காதில் ஒலிக்கச் செய்கின்றார். மழலைச் சொல்லின் இன்பத்தை அக்குறள் செவிக்கு ஊட்டிவிடுகின்றது என்று கூறலாம்.

இவ்வாறு பிறர் வேட்கும்படி தேர்ந்த சொல்லால் நிரந்து இனிது சொல்லும் திறம் அவர் சொற்களுக்கு இருப்பதற்கு அடிப்படைக் காரணம் சுருங்கச் சொல்லலாகும். சில சொற்களால் எதையுஞ் சொல்ல முற்படுவார்கள் என்றும், அவ்வாறு பல சொற்களை எடுத்தாள்வது சொற்றிறனாகாது என்றும் வள்ளுவரே,

பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றாதவர் – 649

என்ற குறளில் விளக்குகின்றார். அந்தச் சில சொற்களும் மாசற்ற சொற்களாக அமையவேண்டும் என்று வற்புறுத்துகின்றார். மாசற்ற சில சொற்களால் சொல்லுவதுதான் சொற்றிறன் என்பதை வற்புறுத்தப் "பல சொல்லக் காமுறுவர் மன்ற" என்று. பிறர் குறையை எடுத்துக் காட்டுகின்றார்.

எழுத்தானும், சொல்லானும், சீரானும், அடியானும் சுருக்கத்தைப் போற்றி. அதனால் பொருள் நுட்பத்தைத் திட்பமாக உணர்த்தும் திறனால்தான் இந்நூலுக்குக் குறள் எனப் பெயர் வழங்கலுற்றது எனக் கூறலாம். பொருள் கருதி வைக்கப்பட்ட முப்பால் என்ற பெயர் வழக்கிழந்து, சொல்திறன்