பக்கம்:அணியும் மணியும்.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


19 அழகின் உருவமாகவும், பண்பின் புகலிடமாகவும் அன்பின் இருப்பிடமாகவும் விளங்கிய கைகேயி, குறைவற்ற உள்ளத்தோடுதான் வாழ்ந்து வந்தாள் என்பதை முதலில் கம்பர் காட்டுகின்றார். இராமனின் நல்வாழ்வு மந்த்ரையின் உள்ளத்தில் கனலை எழுப்பிவிடுகிறது. அவள் நெஞ்சு துடித்து வெகுளி கொண்டு கண்கள் சிவக்கிறாள். அவள் உள்ளத்தில் எழுந்த அனலை வெளியேயும் மூட்டி விடுவது போலக் கைகேயியின் செவியில் நஞ்சனைய சூழ்ச்சியை மெல்லப் புகுத்துகிறாள். அவள் கைகேயியின் மனத்தை மாற்றுவதற்கு முன்னால் அவள் உள்ளம் எவ்வளவு நிறைவோடு இருந்தது என்பதை அவளை முதன் முதலில் அறிமுகப்படுத்தும் சித்திரத்தில் தீட்டிக் காட்டுகின்றார். கடைக்கண் அளிபொழியப் பொங்கு அணைமேற் கிடந்தாள் என்று அறிமுகப் படுத்துகிறார். தூங்கும் போதும் அவள் துயின்ற கண்களில் அளி பொழிகிறது என்று எடுத்துக் காட்டுகிறார். கொண்ட கொழுநன் மீதும், வளர்த்த மக்கள் மீதும் அளவு கடந்த அன்போடு விளங்கினாள் என்பதைக் கடைக்கண் அளிபொழிய உறங்கினாள் என்று கூறி வெளிப்படுத்துகின்றார். கணவனிடத்தில் மிக்க மதிப்பும், கற்பும் கொண்ட பொற்பினாள் என்பதை, அவர், 'தெய்வக் கற்பினாள் என்ற தொடரால் குறிப்பிடுகின்றார். அதனால், அவள் இயல்பாக மக்களிடத்தில் அன்புக்குறைவோ கணவனிடத்தில் மதிப்புக் குறைவோ கொண்டவள் அல்லள் என்பதைக் காட்டவே, அவள் அளியும், கற்பின் பொற்பும் சிறப்பித்துக் கூறப்படுகின்றன. இராமன் மீது கொண்ட அன்பின் அளவினை. அவள் 'புவிக்கெலாம் வேதமே யன விராமனைப் பயந்தவெற்கு இடருண்டோ என்று கேட்பதிலிருந்து காட்டுகிறார். அந்த நிலையில் கம்பர் அவளைப்பற்றிக் குறிப்பிடும் பொழுது 'ஆழ்ந்த பேரன்பினாள் என்று சுட்டிக் காட்டுகின்றார்.