பக்கம்:அணியும் மணியும்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

5. அன்புடை நெஞ்சம்


வெறும் வெளித்தோற்றங்களை வருணிக்கும் கவிஞனைவிட மனவியல்பை விவரிக்கும் கவிஞனே சிறந்தவனாகப் போற்றப்படுவான். நெஞ்சின் இயல்பையும், அதில் தோன்றும் பலவித உணர்வுகைளையும், அதனால் வெளிப்படும் எண்ணங்களையும் பாங்காகக் காட்டுவதே சங்கவிலக்கியப் பாடல்களின் அடிப்படையெனலாம். ஒருவன் ஒருத்தியரிடைத் தோன்றும் காதலையும், அக்காதல் வளரும் அன்புடை நெஞ்சங்களையும், அக்காதலால் மகிழும் மகிழ்ச்சியையும், பிரிவால் நேரும் துன்பத்தையும் காட்டுவதில், இப்பாடல்கள் தலைசிறந்து விளங்குகின்றன. உள்ளத்தெழும் அகவுணர்வுகளைப் பாடுவதால், இப் பாடல்களுக்கு அகப்பாடல்கள் எனப் பெயர் வழங்குவர். அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை முதலியன இவ்வகையைச்சாரும். அன்புடை நெஞ்சத்தை விளக்கும் காட்சிகள் பலவற்றை இப்பாடல்களால் நாம் அறிகிறோம்.

தலைவன் ஒருவனும் தலைவியொருத்தியும் சந்தித்து உள்ளம் ஒன்றுபட்டு உவகை கொள்ளுகின்றனர். அவ்வவ்வகையில் அவர்கள் பாடி மகிழ்வது அந்த உள்ளம் ஒன்றுபட்ட நிலையைத்தான் என்பதைக் குறுந்தொகைப் பாட்டு ஒன்று விளக்குகிறது. “உன்னுடைய தாயார் எவரோ, என்னுடைய தாயார் எவரோ, அவர்களுக்குள் இதற்குமுன் எந்த உறவும் ஏற்பட்டதில்லை; அதைப்போலவே உன்னுடைய