பக்கம்:அணியும் மணியும்.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


56 சுற்றத்திடம் ஒப்படைத்துவிட்டுப் பெரிய மலையின் உச்சியில் ஏறிக் கீழே விழுந்து உயிர்விடுகிறது. இச்செய்தியைக் கூறி அத்தகைய பண்புமிகு அன்புடை நெஞ்சத்தையுடைய மந்தி வாழும் நாடனே! என்று அவனை விளித்துக் கூறுகிறாள்; அதனால் தலைவியும் அவன் நடு இரவில் வருவதை அஞ்சுகிறாள் என்று அவள் நடுங்கும் நெஞ்சத்தைக் காட்டுகிறாள். மக்களின் அன்புடை நெஞ்சத்தைக் காட்ட விலங்குகளின் அன்பான வாழ்வைப் புலவர்கள் காட்டுவதற்கு இப்பாடல் ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது. கருங்கண் தாக்கலை பெரும்பிறி துற்றெனக் கைம்மை யுய்யாக் காமர் மந்தி கல்லா வன்பறழ் கிளைமுதற் சேர்த்தி ஓங்குவரை யடுக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்கும் சாரல் நாட நடுநாள் வாரல் வாழியோ வருந்துதும் யாமே - குறுந்தொகை, 69 மந்தியின் அன்புடை நெஞ்சின் இயல்பைக் காட்டித் தலைவியின் நெஞ்சு அதைவிட நெகிழ்வும் பிரிவாற்றாமையும் உடையது என்று உணர்த்துகிறாள். அன்பால் பிணைக்கப்பட்ட நெஞ்சங்கள் நடத்தும் இல்லற வாழ்க்கை இன்பமும் நிறைவும் கொண்ட வாழ்வாகும் என்பதை இவ்வகப்பாடல்கள் உணர்த்துகின்றன. திருமணமான பிறகு ஒரு தலைவனும் தலைவியும் வாழ்க்கை தொடங்குகின்றனர். அவள் உணவு இட அதனை உண்டு மகிழ அவன் விழைகிறான். அவளுக்கும் அவனுக்குத் தன் கையால் முதன்முதலில் உணவு பரிமாற வேண்டும் என்ற ஆவல் எழுகிறது. விரைவில் உணவு அட்டு அவனுக்கு இடவேண்டும் என்ற ஆர்வம் அவளை உந்துகிறது. புளிக்குழம்பு செய்யும் பொருட்டு அக் குழம்பினைக் கூட்டி வைக்கத் தன்