பக்கம்:அணியும் மணியும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

வீடு திரும்புதலே சிறப்பு என்றும் அறிவுறுத்துகிறது. அறிவுக்கும் உணர்வுக்கும் இடையே நடக்கும் மனப்போராட்டத்தின் நடுவில் உடம்பு அகப்பட்டு மெலிந்துவிடுகின்றது. இந்நிலை வலிய மருப்புடைக்களிறு இரண்டு இருபுறம் தனித் தனியே நின்று தேய்ந்த பழங்கயிறு ஒன்றன் இருபுறத்தையும் பற்றி இழுக்க, அது மெலிந்து அறுந்துபோகும் நிலைக்கு உவமிக்கப்பட்டுள்ளது. களிறுகளால் ஈர்க்கப்படும் தேய்புரிப் பழங்கயிற்றின் நிலையைப் போல் இருவேறு உணர்வுகளால் அலைக்கப் பெற்று மெலிந்த தலைவன் உடல் நலிந்து விடுகிறதென்று கூறப்படுகிறது. தலைவன் நெஞ்சில் எழும் அலைகளின் அலைப்பால் மெலியும் அவன் உடல், அறுந்து விழும் தேய்ந்த பழங்கயிற்றுக்கு உவமைப் படுத்துகின்றார்:

புழந்தாழ்பு இருண்ட கூந்தற் போதின்
நிறம்பெறும் ஈரிதழ் பொலிந்த உண்கண்
உள்ளம் பிணிக்கொண்டோள்வயின் நெஞ்சம்
செல்லல் தீர்க்கம் செல்வாம் என்னும்
செய்வினை முடியாதுஎவ்வம் செய்தல்
எய்யா மையோடு இளிவுதலைத் தருமென
உறுதி தூக்கத் தூங்கி அறிவே
சிறிதுநனி விரையல் என்னும் ஆயிடை
ஒளிறேந்து மறுப்பிற் களிறுமாறு பற்றிய
தேய்புரிப் பழங்கயிறு போல
வீவது கொல்என் வருந்திய உடம்பே

—நற்றிணை, 284

என்று மனப் போராட்டங்களைத் தக்க உவமை கொண்டு விளக்கும் நிலையைப் பார்க்கிறோம். அன்புடை நெஞ்சம் தாங்கும் அல்லலை அவ்வுவமை அழகு பட உணர்த்துகிறது.

தலைவியைப் பிரிந்த தலைவனின் தனிமை நெஞ்சம் மேலே விவரிக்கப்பட்டவாறு போலவே மற்றொரு புலவர் தலைவனைப்பிரிந்து தனிமையால் வாடும் தலைவியின்