பக்கம்:அணியும் மணியும்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61

நெஞ்சத்தின் தன்மையைப் புலப்படுத்துகின்றார், தலைவன் உடனிருந்தபோது உவகை கொண்டு வளமான வாழ்வைப் பெற்ற தலைவி, அவன் அவளைப் பிரிந்துவிட்ட காரணத்தால் தனிமையுறுகிறாள். அவள் நெஞ்சு அவன்மாட்டுச் சென்றுவிட்ட காரணத்தால் உணர்வு குன்றி உடம்பை மட்டும் வீணுக்காகப் பேணுவது போன்ற உணர்வால், வாழ்வில் வெறுப்பும் சலிப்பும் கொள்கிறாள். அவள் அடைந்த தனிமை நிலைமைக்கு வேறோர் தனிமை நிலைமை உவமையாகக் கூறப்படுகின்றது. வெஞ்சின வேந்தனின் வெம்பகையால் அலைப்புண்ணல் அஞ்சி, மக்கள் தாம் வாழும் பேரூரை விட்டு அகன்றுவிட, அதனைக் காக்கும் தனி மகன் ஒருவன் தனிமைத் துயராலும் விருப்பற்ற உணர்வாலும் வாழ்க்கையை வெறுத்து, வாழ்வைச் சுமையாகக் கருதி நாட்களைக் கடத்தும் நிலையைப் போன்று இவள் வாழ்வு அமைந்திருப்பதாகக் கூறுகிறாள் பாழ் காத்திருக்கும் தனிமகன் உடலை விருப்பின்றிப் பேணுமாறு போல் இவ்வுடம்பைக் காக்க வேண்டிருப்பதாகத் தலைவி கருதுகிறாள்:

நெஞ்சம் அவர்வயின் சென்றென ஈண்டொழிந்து
உண்டல் அளித்துஎன் உடம்பே விறற்போர்
வெஞ்சின வேந்தன் பகையலைக் கலங்கி
வாழ்வோர் போகிய பேரூர்ப்
பாழ்காத் திருந்த தனிமகன் போன்றே

- நற்றிணை, 153

வாழ்வோர் போய்விட்ட காரணத்தால் வெறுமையுற்ற பேரூராகிய பாழிடத்தைக் காக்கும் தனிமகனைப் போன்று, நெஞ்சு நீங்கிவிட்ட காரணத்தால் தனிமையும் உடம்பு உணர்வற்றுக் கிடக்கிறது என்று உணர்த்துகிறாள். இவ்வாறு பிரிவால் அன்புடை நெஞ்சங்கள் படும் அல்லலைப் பாலைத்திணைப் பாடல்கள் உணர்த்தக் காண்கின்றோம்.

முல்லைத் திணைப் பாடல் ஒன்று, இல்லிருந்து ஆற்றித் தலைவன் வருகையை எதிர்பார்க்கும் தலைவியின்