பக்கம்:அணியும் மணியும்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

கேளிர்’ என்ற கோட்பாட்டை அடையும் என்பதையும் மெல்ல மெல்ல விளக்குகிறது.

எல்லோரும் திருமணம் செய்துகொண்டு இன்ப அன்பு வாழ்வைக் காண முடியும் என்று உறுதியாகக் கூறவியலாது. இன்பத்தைத் தேட, அவ்வின்பம் கானல்நீர் போல் அமைந்து எட்டாத கனியாக விளங்கி வாழ்க்கை ஒருசிலருக்குக் கசந்து விடுகிறது. பொருந்தாத மனங்கள் திருமணம் செய்துகொண்டு இல்லறத்தில் ஈடுபடும்பொழுது, மனக்கசப்பும் வாழ்க்கையில் வெறுப்பும் பெறாமல் இல்லை. பலருடைய திருமண ஒப்பந்தம் முறிந்து, இன்பம் அன்பு இல்லறம் என்பவை எல்லாம் பாழாகிவிடுகின்றன. அதனால் திருமண வாழ்வுதான் இன்பத்தையும் அன்பையும் பெற முடிந்த வழி என்றும் முடிவாகக் கூற ஒல்லாது. வாழ்க்கையில் நேரும் இன்னல்களைப் போக்க மெல்ல மெல்லப் பற்றுகளை நீக்கினால்தான் விடுதலையையும் மன அமைதியையும் கொள்ள முடியும் என்பது நம் நாட்டுப் பெரியோர்கள் கொள்ளும் கருத்தாகும். தனிப்பட்ட துன்பம் சமுதாயத் துன்பத்தோடு கலந்து ஒன்றிவிடுகின்றது. சமுதாய வாழ்வின் பொதுநன்மை தனிப்பட்டவரின் நன்மையாக முடிகிறது.

மணிமேகலை துறவுள்ளம் வளர்வதற்கு அவள் வீட்டின் சூழ்நிலையும், அவளைச் சுற்றியிருந்த நாட்டின் சூழ்நிலையும் காரணம் என்பதை ஆசிரியர் சாத்தனார் தெளிவாகக் காட்டுகின்றார். நான் எனது என்ற பற்றின் காரணமாகவும், சாதி குலம் உறவு என்ற கட்டுப்பாட்டாலும் சமுதாயம் பொது நன்மை செய்வதில் பின்தங்கிவிடுகிறது. சமுதாயம் திருந்த வேண்டுமென்றால் தனிப்பட்ட வாழ்விலும் பொது வாழ்விலும் பற்றற்ற உள்ளம் வேண்டும் என்பதையே மணிமேகலையின் துறவு உணர்த்துகிறது.