பக்கம்:அணியும் மணியும்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

71

இருந்த செய்தி கூறப்படுகிறது. இவை எல்லாம் துறவு கொள்வதற்குத் தக்க சூழ்நிலையாக அமைந்துவிடுகின்றன.

மணிமேகலை துறவுள்ளம் கொள்வதற்குக் காரணமான சூழ்நிலைகளை விளக்கிய சாத்தனார், உறவை அறுத்துத் துறவில் கால்கொள்ளும் அரியசெயலையும் உடன்விளக்கிச் செல்கிறார். அவள் அழகிலோ பிறரைக் கவரும் கவர்ச்சியிலோ உள்ளத்தைக் கவரும் வனப்பிலோ எந்த வகையிலும் குறைந்தவள் அல்லள் என்பதையும், அவள் அழகில் நாட்டுக் காவலன் மகன் மயங்கி, அவளை வாழ்க்கையில் திருப்ப முயலும் முயற்சியையும், அவற்றை எதிர்த்து அவள் வெற்றிபெறும் சீரிய திறத்தையும் சிறப்பாகக் காட்டிச் செல்கின்றார். மணிமேகலை, தந்தையும் தாயும் தாம் நனி உழந்த வெந்துயர் இடும்பையைக் கேட்டு, உள்ளம் நொந்து உகுத்த கண்ணிர்த் துளிகள் தன் கன்னங்களை நனைத்த நிலையில், அவள் அழகோடு திகழ்ந்தாள் என்பதை அவள் தோழி சுதமதி வாயில் வைத்துக் கூறுகிறார்:

மணிமேகலைதன் மதிமுகந் தன்னுள்
அணிதிகழ் நீலத்து ஆய்மலர் ஒட்டிய
கடைமணி யுகுநீர் கண்டனன் ஆயின்
படையிட்டு நடுங்கும் காமன் பாவையை
ஆடவர் கண்டால் அகறலும் உண்டோ

- மலர்வனம் 20-24

என்று, அவள் அழகினையும் அதனால் பிறர் கவரப்படும் நிலையினையும் எடுத்துக் காட்டுகின்றார்.

அழகும் இளமையும் பெற்ற அவள், வாழ்வில் விழைவும் விருப்பும் நீங்கி, அருளறத்தை வளர்க்க உறவை நெகிழ்த்துத் துறவை வளர்க்கும் உள்ள நிகழ்ச்சியும், சூழ்நிலையைத் திருத்தும் நோக்கில் அவள் ஈடுபடும் அறச் செயலும் ஆங்காங்கே கூறப்படுகின்றன. தனிப்பட்டவரிடத்துச் செலுத்தும்