பக்கம்:அணியும் மணியும்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

93

இவ்வுண்மைகள் விளக்குகின்றன. அவை அவர்கள் வாழ்ந்த காலத்துக்கு மட்டும் பொருந்துவனவாக அமையாமல், எக்காலத்துக்கும் ஏற்றவையாக விளங்குகின்றன. அவை அறிவின் தெளிவிலும், உணர்வின் உயர்விலும் தோன்றிச் செறிவும் திட்பமும் வாய்ந்து வாழ்க்கையைப் பற்றிய நுட்பமான செய்திகளைத் தெரிவிக்கின்றன.

உலகில் போர் நிகழ்கிறதே என்று அன்றும் மனிதன் கவலைப்பட்டான்; இன்று அதைப் பற்றியே உலகம் சந்தித்துக் கொண்டிருக்கிறது. அன்று வாட்போர் செய்து ஆட்கனைக் கொன்று வெற்றியும் தோல்வியும் கண்டனர்; இன்று விஞ்ஞானக் கருவிகளைக் கொண்டு உலகம் அழியத்தக்க அணுக்குண்டுகளையும் போர்க் கருவிகளாக அமைத்துள்ளனர். தனி மனிதரும் நாடும் உலகும் அழிந்துவிடுமோ என்று உலகம் அஞ்சிக் கொண்டிருக்கிறது. எப்பொழுதும் இந்த உலகம் இதே போக்கில் தானா போய்க்கொண்டிருக்க வேண்டும்! இதற்கு ஒரு முடிவும் இல்லையா? வரலாறு வேறு எந்த நல்ல முடிவையும் காட்டக் கூடாதா என்று நம் உள்ளம் ஏங்குகின்றது. என் செய்வது? புறநானூறு அனுபவத்தோடு கூடிய ஒரு பேருண்மையை எடுத்துச் சொல்கிறது.

ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்

புதுவ தன்றுஇவ் உலகத்து இயற்கை

என்று எடுத்துக் கூறுகிறது.

உலகின் இயல்பை உள்ளதை உள்ளவாறு எடுத்துக் கூறிப் போரைப் பற்றிய கருத்தை வாழ்வின் பேருண்மையாக விளக்குகிறது. ஆனால் இந்த உலகத்திற்கு இவ்வுண்மையைத் தாங்கும் ஆற்றல் இருக்கிறதோ என்பதே பலரின் அச்சமாக விளங்குகிறது.

ஒருவனை ஒருவன் அடுதல் உலகத்தியற்கை என்பது உண்மையாகும். இந்த இயற்கையை வளர்த்து விட்டால் உலகம்