பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
xi

தறிவதற்கும் துணையாக இருக்கும் என்று கருதியே. அவை சேர்க்கப்பெற்றுள்ளன.

இந்நூலில் மேற்கொள்ளப்பெற்றுள்ள கலைச்சொற்களில் பெரும்பாலானவை முன்னோர் அரும்பாடுபட்டு அமைத்தவை. அவற்றுள் பலவற்றைத் திருத்தியமைத்த பொறுப்பு சிறிது எனக்கு உண்டு. யானும் பல கலைச் சொற்களை ஆக்கி அமைத்திருக்கின்றேன். கலைச்சொல்லாக்கம் ஓர் அரிய கலை. அதற்குப் பொருளறிவும் வேண்டும் : பன் மொழியறிவும் வேண்டும். உயர்ந்த முறையில் சொற்கள் அமைந்துவிட்டால் அவை என்றும் வாழும் ; இல்லையென்றால் வீழும். எல்லா நிலைகளிலும் அறிவியல் தாய்மொழியில் பயிற்றப்பெறும் பொழுதுதான் உயர்ந்த கலைச்சொற்கள் அமையும் வாய்ப்புக்கள் உண்டாகும். இந்நூலிலுள்ள கலைச்சொற்கள் பக்கங்களின் அடியில் படிப்போருக்குத் துணையாக இருக்கும் என்று கருதி அடிக்குறிப்புக்களாக ஆங்கிலச் சொற்களுடன் தரப்பெற்றுள்ளன.. பல சொற்கள் இன்னும் திருத்தம் பெறவேண்டியவை என்பதை யான் நன்கு அறிவேன்.

பொருள் விளக்கத்திற்குப் படங்கள் பெருந்துணை புரியும் என்பது கல்வியறிஞர்கள் கண்ட துணிபு; சாதாரண மக்களின் அனுபவம். இந்நூலை 44 படங்கள் அணி செய்கின்றன. இப்படங்களை எழுதி உதவியவர் என் அரிய நண்பர் திரு. வெ. முனியாண்டி என்பவர்; காரைக்குடி அழகப்பா மாதிரி உயர்நிலைப்பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றுபவர். நுண்ணிய கலத்திறம் படைத்தவர். அறிவியல் துறையில் அமையவேண்டிய படங்களின் நுட்பங்களையெல்லாம் நுணுகியறியும் திறமை அவரிடம் இயல்பாகவே அமைந்து கிடக்கின்றது. இவ்வாண்டு அவர் அடிக்கடி நோய்வாய்ப்பட்டார். எனினும், நோயுற்ற நிலையிலேயே சிறிதும் சிரமத்தைப் பாராது நல்ல பல ஓவியங்களே அமைத்துத் தந்தார். அவருக்கு என் உளங்கனிந்த நன்றி. அவருக்கு எல்லா நலன்களையும் ஆண்டவன் அருளவேண்டும் என்பது என் பிரார்த்தனை.