பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/123

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணு உலைகள்

107


பத்தி செய்யக்கூடுமானால், அதில் எரியையே செலவாகவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், பயன்பட்ட எரியை யெல்லாம் திரும்பவும் உண்டாக்கப்பெற்று விடுகின்றது. இத்தகைய அணுஉலையொன்றினை மூன்றாண்டுகள் உபயோகப்படுத்தித் தான் பயன்படுத்துவதைக் காட்டிலும் அதிகமான எரியையை உலை உண்டாக்குகிறது என்று அமெரிக்க அணுக்குழு நிருபித்திருக்கின்றது (படம்-17). அது எரியையைப் பிறப்பிப்பதால் அதற்கு பிரீடர் அணு உலை என்று பெயர் ஏற்பட்டது. ஆங்கிலத்தில் breed என்றால் பிறப்பி என்பது பொருள். இந்த அணு உலையைக் கொண்டு மின்னாற்றலை உற்பத்தி செய்வதில் இரு நன்மைகள் உண்டு. ஒன்று; உடன் விளைவுப் பொருளாகக் கிடைக்கும் புளுட்டோனியத்தை நல்ல விலைக்கு விற்கலாம்; இதனால் அணு உலை இயங்குவதால் உண்டாகும் செலவைக் குறைக்கலாம். இரண்டு : மொத்தச் செலவு குறைவதால் கிடைக்கும் மின்னாற்றலும் குறைந்த விலைக்குக் கிடைக்கின்றது. புளுட்டோனியம் உற்பத்தியாதலால் யு-288 குறைந்துகொண்டே வரும்; ஆகவே, அடிக்கடி அணு உலையில் யு-288ஐப் போட்டுக்கொண்டேயிருத்தல் வேண்டும்.

ஒரு பிரீடர் அணு உலையின் உள்ளகத்தில் யு-285 வைக்கப் பெற்றிருக்கும்; புளுட்டோனியத்தையும் அதில் வைப்பதுண்டு, உள்ளகத்தின் அளவு கிட்டத்தட்ட ஒரு "கூடைப் பந்து" [1] அளவு இருக்கும். அதைச் சுற்றிலும் யு-238 கம்பளம்போல் சூழ்ந்திருக்கும். யு-235 லிருந்து விடுவிக்கப் பெறும் பொது இயல் மின்னிகள் விரைந்து வந்து யு-238 ன் அணுக்களைத் தாக்குகின்றன. இதனால் நடைபெறும் உட்கரு மாற்றத்தில் புளுட்டோனியம் உற்பத்தியாகின்றது. திரவ நிலையிலுள்ள சோடியம் யுரேனிய உள்ளகத்தில் புதைந்துள்ள குழல்களின் வழியாகக் குளிர்ப்பானாகப் பாய்கின்றது. திரவ நிலையிலுள்ள அவ்வுலோகம் மிக அதிகமாகச் சூடாக்கப் பெற்று, கொதி கலனில் நீராவியை உண்டாக்கும் வரை, பல்வேறு படிகளைக் கடந்து செல்லுகிறது.


  1. கூடைப் பந்து- basketball.