பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/181

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணு ஆராய்ச்சிக்கருவிகள்

165


காட்டுகின்றது. முதன் முதலில் ரதர் போர்டு பயன்படுத்திய எண்-கருவியின் மூலம் நிமிடத்திற்கு மூன்று அல்லது நான்கு துணுக்குகளையே எண்ண முடிந்தது, இப்பொழுதுள்ள கருவிகளில் நிமிடத்திற்குப் பதினாயிரம் வீதம் எண்ணிக் கணக்கிடக்கூடிய அமைப்புக்கள் பொருத்தப் பெற்றிருக்கின்றன. மின் துணுக்குகள் பாயும்பொழுது மின்னுாட்டம் ஓங்கியும் பின்னர்த் தாழ்ந்தும் வருகின்ற துடிப்பினை ஒலிபெருக்கியினால் பெருக்கினால் 'கிலிக், கிலிக்' என்று துணுக்குகள் போவதைக் கேட்கலாம். நம்முடைய ஊனக் கண்களால் காணமுடியாத பொருள்களும், செவிகளால் கேட்க முடியாத ஒலிகளும் இக்காலத்தில் அறிவியலறிஞர்களின் ஆராய்ச்சியின் விளைவால் மக்கள் கண்ணாரக் கண்டு, காதாரக் கேட்டுக் களிக்கும் பொருள்களாக மாறியது வியப்பினும் வியப்பேயன்றோ ?

கைகர் - எண்ணிகள் அணு உலைகளிலும் அணுவைச் சிதைக்கும் இயந்திரங்களிலும் தீங்கு பயக்கும் கதிர்வீச்சினைக் கண்டறியப் பெரிதும் பயன்படுகின்றன. அன்றியும், அவை யுரேனியக் கணிப்பொருள்களையும் பிறகு கதிரியக்கத் தனிமங்களையும் கண்டறிய உபயோகப்படுகின்றன. இன்று அமெரிக்காவில் மட்டிலும் 20,000-க்கு மேற்பட்ட கருவிகள் பயன்பட்டு வருகின்றன. அங்கு 85 டாலருக்கு அக்கருவி விலைக்குக் கிடைக்கின்றது.

தகர்க்கும் கருவிகள்

பண்டைக் காலத்தில் எதிரியின் கோட்டையைக் தகர்ப்பதற்கு தேர்ப்படை, யானைப் படை, குதிரைப் படை, காலாட்படை என்ற நான்கு படைகளைப் பயன்படுத்தினர் என்று இலக்கியங்களில் படிக்கின்றோம். இவற்றைச் 'சதுரங்கப் படைகள்' என்று முன்னோர் குறிப்பர். இன்று அணு என்னும் கோட்டையைத் தகர்க்கவும் நான்கு படைகள் பயன்படுகின்றன. ஒன்று, நேர் இயல் மின்னி அஃதாவது நீரியக்கரு. இரண்டு, இருதி ; நீரியத்தின் மற்றொரு வகை. மூன்று, ஆல்பா-கதிர்; அஃதாவது, பரிதியக் கரு. நான்கு, பொது இயல் மின்னி. இந்த நான்கு அணு-ரவைரவை-