பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உயிரியலும் அணுவும்

175


தனிமங்கள் படிப்படியாகச் சிதைந்தழிதலால் கதிர்வீச்சு மெதுவாக நடைபெற்றுக் கொண்டேயிருக்கிறது. இன்று செயற்கை முறையில் மனிதன் படைப்பினால் கதிரியக்கப் பொருள்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. கிட்டத் தட்ட எல்லாத் தனிமங்களின் வகைகளை மனிதன் இன்று ஆக்கிப்படைத்துவிட்டான். அன்றியும், பிற மூலங்களிலிருந்தும் கதிர் வீசல்களின் அளவுகளையும் பேரளவில் அதிகரிக்கச் செய்துவிட்டான். இன்று இப்புவியில் சிதறிக்கிடக்கும் ரேடியத்தையெல்லாம் ஒன்றாகச் சேர்த்துவிட்டான் ; புதிர்க் கதிர்ப் பொறிகளையும் [1], அணுவினைச் சிதைக்கும் பொறிகளையும், அணு உலைகளையும் படைத்து விட்டான். கடத்த ஐம்பது ஆண்டுகளில், ரேடியத்தைக் கண்டறிந்ததிலிருந்து இன்றுவரை, இவ்வுலக முழுவதிலும் அவன் சில இராத்தல்கள் அளவுதான் ரேடியத்தைப் பிரித்தெடுத்திருக்கிறான். ஆனால், அவன் படைத்துள்ள ஓர் அணு உலையிலிருந்து நூற்றுக்கணக்கான டன் அளவு ரேடியம் கொடுக்கக்கூடிய கதிர்வீச்சினை உற்பத்தி செய்துகொள்ள முடியும்.

கதிரியக்க மூலங்களையும் அதிக அளவில் அணுவாற்றலையும் கண்ட மனிதன் அவ்வாற்றலைப் புதிய துறைகளிலும் மிக விரிந்த நிலையிலும் பயன்படுத்தும் வழி வகைகளைக் கண்டறிந்து வருகின்றான். மானிட நலனில் அவ்வாற்றலைக் கையாளும் முறைகளைக்கண்டறிவதில் மனிதன் தன் முழுமுயற்சியினையும் ஒரு முகப்படுத்தி வருகின்றான். இன்று கதிரியக்கப் பொருள்களைக் கையாளும் மக்களின் தொகை அதிகரித்து வருகின்றது. அறிவியலறிஞர்கள் கதிரியக்கப் பொருள்களை “ வழி - துலக்கிகளாகக்” [2]

கையாண்டு உலோகங்களும், கலப்பு உலோகங்களும் உண்டாவதையும், தாவர வாழ்க்கையிலும் மானிட வாழ்க்கையிலும் மறைமுகமாகவுள்ள கிரியைகளைக் கண்டறிவதிலும் முனைந்திருக்கின்றனர். மருத்துவர்கள் இதே பொருள்களை ஆராய்ச்சியிலும், நோய்களை நாடிக் காண்பதிலும், நோய்களைத் தணிப்பதிலும் பயன்படுத்துகின்றனர். தொழில் துறையிலும் அணுவாற்றல்


  1. 3.புதிர்க்கதிர்ப் பொறிகள் - x-ray machines
  2. 4.வழி - துலக்கிகள்- tracers.