பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

176

அணுவின் ஆக்கம்


பல்வேறு முறைகளில் பயன்படுத்தப் பெறுகின்றது. இவற்றைத் தவிர, போர்க்காலத்தில் எதிரிகளைத் தாக்குவதிலும், எதிரிகளால் அணு ஆயுதங்களைக்கொண்டு தாக்குறுங்கால் தன்னைக் காத்துக் கொள்வதிலும் மனிதன் அணுவாற்றலைக் கையாளுகிறான். எனவே, அணுவாற்றல் அமைதிக்காலத்தில் எவ்வெவ்வாறெல்லாம் பயன்படுகின்றது என்பதை அறிந்துகொள்வதும், கதிர்வீச்சினால் நேரிடும் பல்வேறு தீங்குகளை அறிந்துகொள்வதும், அணுவாற்றலால் வெளிப்படும் கண்ணால் காணக்கூடாதனவும் ஆழ்ந்து துளைத்துச் செல்ல வல்லனவுமான மறிலிக் கதிர்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதும் மனிதனுக்கு இன்றியமையாதவைகளாகின்றன.

பாதுகாப்பு முறைகள் : பாதுகாப்பு முறைகளை மனிதன் திடீரென ஒருநாளில் கண்டறிந்து விடவில்லை. பல தொல்லைகளை அனுபவித்த பிறகு பாதுகாப்பு முறை மெதுவாகத் தான் வளர்ந்தது. 1896-ல்தான் புதிர்க்கதிர் விளைவித்த புண் என்ன என்பதை மனிதன் முதன் முதலில் கண்டான். 1915 வரையிலும் புதிர்க் கதிர்கள் அபாயமுள்ளவை என்று பொதுவாக மக்கள் அறிந்திருந்தனரேயன்றி, அதற்குமேல் திட்டமாக ஒன்றும் தெரிந்து கொள்ளவில்லை. பல அறிவியலறிஞர்கள் புதிர்க் கதிர்களும் ரேடியக் கதிர்களும் ஆழ்ந்து பாய்ந்ததனால் மாண்டனர். முதலாம் உலகப் பெரும்போரில் பலர் மருத்துவ நிலையங்களில் புதிர்க் கதிர்களால் சிகிச்சை பெற்றபொழுது மரித்தனர்.

ரேடியத்தைப்பற்றிப் பல விநோதமான கதைகளும் பரவ ஆரம்பித்தன. ரேடியம் உடலுக்குக் கிளர்ச்சியூட்டுகிறது என்பன போன்ற பல தவறான கருத்துக்கள் மக்களிடையே பரவின. மக்கள் அவற்றை நம்பத்தான் செய்தனர். எனவே, 1920-ல் சிறிதளவு ரேடியம் கரைந்தநீர் அற்புத சர்வ-ரோக சஞ்சீவி என்று சொல்லி மிக அதிக அளவு விலைக்கு விற்கப்பெற்றது. அறியா மக்கள் அதனை வாங்கிப் பருகி பரிதாபகரமாக மாண்டனர். உயிருடன் இன்னும் சிலர் இருக்கின்றனர்; அவர்கள் எலும்புபற்றிய நோய்களால் பீடிக்கப்பட்டு வருந்துகின்றனர்.