பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உயிரியலும் அணுவும்

189


சியும் பிசித ஆராய்ச்சியும் நடைபெற்று வருகின்றன. சிகாகோ பல்கலைக் கழகத்திலுள்ள உயிர் நூலறிஞர்கள் ஒர் உயிரணுவின் எப்பகுதி கதிர்வீச்சினால் மிகவும் பாதிக்கப் பெறுகின்றது என்பதை ஆராய்ந்து வருகின்றனர். அவர்கள் மிக நுண்ணிய கதிர்க் கற்றையை ஒர் உயிரணுவின் ஒரு சிறு பகுதியில் குவியச்செய்து நுண்ணனுப் பெருக்கியின் மூலம் கவனித்து வருகின்றனர். ஒரு பிராணியின் உயிரணுவின் குறுக்களவு ஓர் அங்குலத்தில் பன்னிரண்டாயிரத்து ஐந்நூற்றில் ஒரு பங்காகும். அஃதாவது, கூரிய ஒர் ஊசி முனையைக் காட்டிலும் சிறியது. இத்தகையதொரு சிறிய அணுவின் ஒரு பகுதியின்மீது செலுத்தப்பெறும் கதிர்க் கற்றை மிக மிகச் சிறியதாக இருக்கவேண்டும். அஃதாவது, உயிரணுவில் பத்திலொரு பங்காக இருக்கவேண்டும். இது ஒர் அங்குலத்தில் ஒர் இலட்சத்து இருபத்தையாயிரத்தில் ஒரு பங்காகும். இந்த அளவு கதிர்க் கற்றையைத் தரவல்ல ஒரு பொறியினைக் கண்டறிந்து விடலாம் என்று அறிவியலறிஞர்கள் நம்புகின்றனர். கொலம்பியா பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறை ஆராய்ச்சியாளர்கள் நரம்பினைச் சூழ்ந்துள்ள நுண்ணிய உறையினைப்பற்றித் தெரிந்துகொள்ள கதிர்வீச்சினைச் சிறந்த கருவியாகக் கொள்ளலாம் என்று சோதனைகள் மூலம் நிரூபித்து விட்டனர். அன்றியும், கொலம்பியா அறிவியலறிஞர்கள் எந்த அளவு கதிர்வீச்சு ஓர் உயிரணுவின் வெளியுறை கேடு பயக்கும் அயனிகள் நரப்ப இழையத்தினுள் புகாது காக்கும் திறனைக் குறைக்கின்றது என்பதைக் கண்டறிவதில் ஈடுபட்டிருக்கின்றனர். உயிரணுக்கள், அவற்றின் பகுதிகள் ஆகியவை கதிர் வீச்சால் எவ்வாறு பாதிக்கப்பெறுகின்றன என்பதில் கண்டறிந்த முடிவுகளைக் கொண்டு, குருதி, இழையம், உள்ளுறுப்புக்கள் ஆகியவை எவ்வாறு கேடுறுகின்றன என்பதைத் தீர்மானிக்க முயன்று வருகின்றனர். இதைக்கொண்டு தாவரங்கள், பிராணிகள், மனிதன் ஆகியவற்றின் வளர்ச்சி, வாழ்நாள் ஆகியவற்றைக் கணக்கிடவும் யுக்தி செய்து விடுகின்றனர். இந்த ஆராய்ச்சிகள் யாவும் கதிர்வீச்சால் ஏற்படும் நோயினுக்குச் சிகிச்சை தருவதில் பயன்படக் கூடும்.