பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

212

அணுவின் ஆக்கம்


சிறிய அளவுபகுதி சில ஆண்டுகளில் மறைகின்றது. எனவே, இத்தகைய கதிரியக்க ஒரிடத்தான்களைப் பயன்படுத்தி நமக்குத் தேவையான அளவு கதிர்களைப் பெறலாம். இரண்டாம் உலகப் பெரும்போருக்குப் பிறகு இவ்வகை ஓரிடத்தான்கள் மருத்துவத்தில் பெரிதும் பயன்படுகின்றன.

இன்று புற்றுநோய் சிகிச்சையில் கதிரியக்கச் சோடியம்[1] , கோபால்ட்டு-60[2] , செசியம்-137[3] போன்ற பொருள்கள் பயன்படுகின்றன. கதிரியக்கச் சோடியத்தைப் புற்றுநோய் உள்ள இடத்தில் வைத்துவிட்டால் அது விரைவான பீட்டா - கதிர்களை வெளிவிட்டுப் புற்றை அழிக்கின்றது ; புற்றை விளைவிக்கும் கிருமிகள் மடிந்துவிடுகின்றன. இது விரைவில் தன் கதிரியக்க இயல்பை இழந்துவிடுவதால், இச்சிகிச்சை ரேடியத்தைப் போல்ன்றி வரம்புகடந்து சென்று அபாயகரமான கோளாறுகளை விளைவிக்க வழியில்லை. கதிரியக்கச் சோடியத்தின் அரை-வாழ்வு பதினைந்து மணி நேரம் ; ரேடியத்தின் அரை-வாழ்வு 1600 ஆண்டுகள் என்பது நமக்குத் தெரியும். ஆனால், இந்தச் செயற்கைப் பொருள் சம எடையுள்ள ரேடியத்தைவிட பத்து இலட்சம் மடங்கு அதிகக் கிளர்ச்சியுள்ளது என்று கணக்கிடப்பெற்றிருக்கின்றது. அன்றியும், சோடியத்திலிருந்து தோன்றும் மக்னீசியம் என்னும் தனிமமும் உடலில் எளிதில் கலந்து விடும். மக்னீசிய உப்பு உடலுக்குக் கெடுதி செய்வதில்லை. எனவே, சிகிச்சை முடிந்த பிறகு இதை உடலிலிருந்து வெளியே அகற்றவும் தேவையில்லை.

கோபால்ட்டு-60ஐ இச்சிகிச்சையில் பயன்படுத்தும் முறையை 1951-ல் கனடா நாட்டைச் சேர்ந்த அறிவியலறிஞர்கள் கண்டறிந்தனர். இதை அவர்கள் முதலில் கோபால்ட்டு ‘குண்டு’[4] என்றே வழங்கினர். இப்பொருள் ரேடியத்தைப் போலவே மிக வன்மையுள்ள, ஆழ்ந்து துளைத்துச் செல்லவல்ல கதிர்களை வெளியிடவல்லது.


  1. 33. சோடியம் - sodium.
  2. 34. கோபால்ட்டு - cobalt.
  3. 35. செசியம் - cesium,
  4. 36. கோபால்ட்டு குண்டு - cobalt bomb