பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அணுவின் அற்புத ஆற்றல்

9
வாழ்க்கையில் பயன்படும் சாதனங்கள், வீடுகளில் பயன்படும் சாதனங்கள், பண்ணைகளில் பயன்படும் சாதனங்கள் ஆகியவற்றிற்குக் கிட்டும்படி செய்தல் வேண்டும். அவற்றை ஆற்றல் வாய்ந்தனவாகவோ, விரைவாகவோ உற்பத்தி செய்வது ஒரு முக்கிய பிரச்சினை அல்ல. அவற்றை மலிவாக உற்பத்தி செய்வது, எளிதாகக் கையாளும் முறைகளைக் காண்பது, எப்படி எப்பொழுது பயன்படுத்துவது என்பதுதான் மிகவும் முக்கிய பிரச்சினை. இத்தகைய பிரச்சினைகள்தாம் 1955-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் ஜெனிவாவில்22 கூடிய ஐக்கிய நாடுகளின்23 மாநாட்டில்24 ஆராயப்பெற்றன ; பல்வேறு நாடுகளினின்றும் போந்த அறிவியலறிஞர்கள் இவ்வாராய்ச்சியில் கலந்துகொண்டனர். இப்பிரச்சினைகளுக்கு விடைகள் காண்பது அவ்வளவு எளிதன்று : இவற்றைக் காண்பதற்கு ஆராய்ச்சியும் அனுபவமும் மிக்க நிபுணர்கள் இத்துறையில் மிக நன்றாக ஈடுபட்டு உழைக்கவேண்டும். இன்றைய நிலையில் ஒரு சிலர் தான் இவற்றிற்கு விடை காண வல்லவர்களாக உள்ளனர். ஒரு காரணம், அவற்றிலடங்கிய விதிகளும் மெய்ம்மைகளும் பத்து அல்லது இருபது ஆண்டுகட்கு முன்னர் எவரும் அறியாதவை ; எனவே, பள்ளிப் பாடப்புத்தகங்களில் காணப்பெறாதவை. இன்னொரு காரணமும் உண்டு. உலகம் முழுவதும் போரில் ஈடுபட்டிருந்த காலத்தில், போர் மேகங்கள் எங்கும் குமுறிக்கொண்டிருந்த பொழுது, அணுவைப் பற்றிய புதிய அறிவின் பெரும்பகுதி கண்டறியப் பெற்றது; அறிவியலறிஞர்களிடையிலும் அவ்வறிவினை இரகசியமாக வைத்துக்கொண்டிருத்தலே ஒரு கொள்கையாக இருந்தது. எனவே, பல்வேறு நாட்டு ஆராய்ச்சி நிபுணர்களும்25 பொறியியல் வல்லுநர்களும்26 அணுவைப் பற்றிய கருத்துக்களை வெவ்வேறு விதமாகத் திரித்து உரைத்து வந்தனர்.


22 ஜெனிவா-Geneva. 23 ஐக்கிய நாடுகள்-United Nations. 24 மாநாடு-conference. 25 ஆராய்ச்சி நிபுணர்-research men 26 பொறியியல் வல்லுநர்-engineer.