பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2. அணுவின் அமைப்பு



அணுவின் நுட்பம்: அணு மிக மிக நுண்ணிய துகள் பேராற்றல் வாய்ந்த நுண்ணணுப் பெருக்கியால் காண முயன்றாலும் அது நம் ஊனக் கண்ணுக்குப் புலனாகாது. அரைக்கோடி அணுக்களை அணிவகுத்து நிற்க வைத்தால் நாம் எழுதும்பொழுது வைக்கும் முற்றுப் புள்ளி யினுள் அடங்கிவிடும். எனினும், அறிவியல் அறிஞர்கள் மிகச் சிறிய அணுவின் அளவினையும் கணக்கிட்டுள்ளனர். ஓர் அங்குலத்தினே இருபத்தைந்து கோடிகளாகப் பங்கிட்டால் கிடைக்கும் அளவே அணுவின் குறுக்களவாகும் என்று கண்டுள்ளனர். பெரிய அணுவின் குறுக்களவு இதனைவிட இரண்டரை மடங்கு பெரியது; அஃதாவது, ஓர் அங்குலத்தினைப் பத்து கோடியாகப் பங்கிட்டதில் ஒரு பங்காகும். இதனை ஒர் எடுத்துக்காட்டால் விளக்குவோம். ஒரு திராட்சைப் பழத்திலுள்ள ஒவ்வொரு அணுவும் ஓர் அங்குல விட்டமுள்ள பந்துபோல் பெருக்கமடைவதாகக் கற்பனை செய்துகொண்டால், அந்தத் திராட்சைப் பழம் நம் பூமியளவு உப்பிப் பெருக்கமடைந்து விடும். இத்துணைச் சிறிதாகவுள்ள ஒரு பொருளே மனத்தால் எண்ணிப் பார்க்கவும் சிரமமாக இருக்கிறது. நமக்கு மட்டுமல்ல ; அறிவியலை முற்றும் கற்ற மேதைகள் உட்பட, அனைவருமே அணுக்களை அதிசயப் பொருள்களாகவே - அற்புதப் பொருள்களாகவே-கருதுகின்றனர். ஒரு சிறு துகளைப் பார்க்கவும் பெருக்காடி1 தேடும் நமக்கு அணு எப்படிப் புலனாகும்?


1பெருக்காடி-magnifying glass