பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

அணுவின் ஆக்கம்



ஆனால், இன்றைய அறிவியலறிஞர்கள் அணுவின் எடை, அதன் அகலம், நீளம், கனம், அமைப்பு, இனம், ஆக்கப்பாடு, அழிவாற்றல் முதலிய அனைத்தையும் ஆய்வகத்தில் ஆய்கருவிகளின் துணைகொண்டு அறுதியிட்டுக் கண்டறிந்துள்ளனர். அணுவின் நுட்பம் முழுவதையும் அறிந்தால், இயற்கையின் இரகசியம் முழுவதையும் அறிந்துகொள்ள முடியும். இதனை முழுவதும் அறிந்தவர் யார் ? கற்றது கைமண் அளவுதான் ; கல்லாதது உலகளவு உள்ளது.

இன்று வரையில் மனிதன் அணுவினைப்பற்றி அறிந்துள்ள நுட்பங்களை எண்ணிப் பார்த்தால் அவன் கண்ட உண்மையின் பெருமை, சென்ற வழியின் அருமை, ஆராய்ச்சியின் திறமை ஆகியவை யெல்லாம் விளங்கும். அவனுடைய அறிவு அணுவின் சிற்றளவு செல்லக்கூடிய மிகக் கீழான நிலைக்கும் சென்று அதனைக் காண முனைகின்றது. மகிமா என்பது எண்வகைச் சித்திகளுள் ஒன்று ; அது விருப்பம்போல் ஓர் உருவத்தைப் பருக்கச் செய்யும் ஒருவகைப் பேராற்றல். அணுவினை அண்டமாக்கும் மகிமா சித்து விளையாடும் ஒருவரிடம் ஒரு நீரிய2 அணுவினையும் ஒரு பந்தினையும் கொடுத்தால் அவர் இரண்டினையும் தன் உள்ளங் கைகளில் வைத்துக்கொண்டு ஒரே வீதத்தில் இரண்டினையும் விம்மிப் பெருகச் செய்துகொண்டே போவார். பந்து இவ்வுலக அளவு பெரியதாக விம்மித் தோன்றுங்கால், அணு பையன் விளையாடும் பந்துபோலத் தான் தோன்றுகிறது. பந்துக்கும் உலகுக்கும் எவ்வளவு வேற்றுமை ! அணு அவ்வளவு நுட்பமானது. ஆனால், அதனைக் கொண்டுதான் அறிவியலறிஞர்கள், பண்டைக் காலத்துச் சித்தர்கள்போல், பந்தாட்டமும் கோலியாட்டமும் விளையாடுகின்றனர். எல்லா விளையாட்டுக்களும் அவர்களது கற்பனை யுலகிலேயே நடைபெறுகின்றன.

ஓர் அங்குல நீளம், ஓர் அங்குல அகலம், ஓர் அங்குல உயரம் உள்ள இடத்தில் அடங்கிக் கிடக்கும் அணுத்


2நீரியம் - hydrogen,