பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மங்கல வாழ்த்து

313




ஆனால், இன்றைய அணுயுகத்தில் அறிவியல் அளிக்கும் வரத்தைவிட வேறொன்று முக்கியமாகவுள்ளது. போட்டியுலகம் மறைய வேண்டும் ; பொறாமையுலகம் வீய வேண்டும். கூட்டுணர்ச்சி பெருக வேண்டும் ; மனிதப் பண்பாடு வளரவேண்டும். இவற்றையெல்லாம் மனத்தில் கொண்டுதான் சர் வின்ஸ்டன் சர்ச்சில்[1] அணுயுகத்தை நம்முடைய 'தலைவிதியின் திருப்பம்' என்று கூறிப் போந்தார். எதிர்காலத்தில் தோன்றவேண்டிய ஆற்றல் மின்னாற்றல் மட்டிலும் அன்று ; அது பொருளாதார ஆற்றலாகவும் சமூக ஆற்றலாகவும் மலர வேண்டும். எதிர் காலத்தில் நிறுவப் பெறும் மின்னாற்றல் நிலையங்களிலிருந்து வெளிப்படும் எதிர் மின்னிகளின் பிரவாகம் பிற்போக்கான நாட்டில் உரிமைக் குறைவுடன் திண்டாடும் குருதியோட்டத்தில் பாய்ந்து செல்லும். அவ்வாற்றல் பாலைவனங்களையும் சோலைவனங்களாக்கத் துணைசெய்யும் ; இயற்கையன்னை தன் அகட்டினுள் மறைத்து வைத்திருக்கும் பொருள்களைப் புறத்தே கொண்டு வந்து செல்வங் கொழிக்க உறுதுணையாகவிருக்கும் ; உடல்நலத்தை வளர்த்து வாணாளை நீட்டிக்கும்; அதே சமயத்தில் உணவுப் பெருக்கத்தையும் நல்கும். அணு குண்டு போர்க்காலத்தில் பெருந்துணை புரிந்தது போலவே, அணுவாற்றலும் அவ்வாற்றலில் தோன்றிய உடன்-விளைவுப் பொருள்களும் ஆக்கத்தில் பல வியத்தகு செயல்களுக்கும் பெருந் துணைபுரியும். இத்தகைய நலன்களை ஒரு பத்தாண்டில், அல்லது ஒரு சில பத்தாண்டுகளில் நாம் எதிர்பார்க்கலாம். இவ்விளைவுகளைத் துய்க்கும்பேறு மனிதன் கையில் தான் இருக்கின்றது. தாருகவனத்து முனிவர்கள் அபிசாரயாகத்திலிருந்து கிளப்பிவிட்ட கொல்களிறு, நஞ்சுகளைக் கக்கும் பாம்புகள் போன்ற கொடியவற்றையும் ஆலமுண்ட நீலகண்டன் தன்நலத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டதைப் போலவே, அறிவியலறிஞர்கள் சோதனைச்சாலையில் கண்டறிந்த அணுகுண்டின் ஆற்றலை மக்கள் வாழ்வின் பொருட்டுப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.


  1. 51சர் வின்ஸ்டன் சர்ச்சில்-sir winston Churchill.