பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

318

அணுவின் ஆக்கம்

அணுத்திரளை (molecule): தனித்து நிலைத்து நிற்கக் கூடிய வேதியற் சேர்க்கைப் பொருளின் மிகச் சிறிய துணுக்கு. அது பல்வேறு எண்ணிக்கைகளில் பல்வேறு தனிமங்களின் பல்வேறுவித அணுக்களைக் கொண்டிருக்கும். திடப்பளிங்கில் அணுத்திரளைகள் நெருங்கிச் சேர்ந்திருக்கும்; திரவப் பொருளில் நெகிழ்ந்து காணப்படும்; வாயுப் பொருள்களில் தனித்தனியாகப் பிரிந்திருக்கும்.

அண்டக் கதிர்கள் (cosmic rays) : வான வெளியிலிருந்து நாம் அறியாத மூலங்களிலிருந்து பெருவேகத்துடன் பூமியை அடையும் கதிர்கள். அவற்றின் ஆற்றல் பல ஆயிரம் இலட்சம் வோல்ட்டுகளுக்குச் சமம். அவற்றில் நேர்இயல் மின்னிகளும் பெரிய அணுக்கருக்களும் அடங்கியுள்ளன. அவை காற்று மண்டலத்தில் தாக்கும்பொழுது உடன்நிலை (secondary) அண்டக் கதிர்களாக மாற்றப்பெறுகின்றன. இக் கதிர்களில் நேர் இயல் மின்னிகள், எதிர்மின்னிகள், பொது இயல் மின்னிகள், காமா-கதிர்கள், கணக்கற்ற துணுக்குகளடங்கிய எதிர் இயல் மின்னிகள் போன்றவை அடங்கியுள்ளன.

அரை - வாழ்வு (half-life) : ஒரு குறிப்பிட்ட அளவு கதிரியக்கத் தனிமம் படிப்படியாக நடைபெறும் அணுச் சிதைவில்லை. அதன் பாதியளவு தேய்ந்து வருவதற்குத் தேவையான காலம். பல்வேறு தனிமங்களில் இது ஒரு வினாடியின் ஒரு பகுதியிலிருந்து பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் வரையிலும் உள்ளது.

ஆல்பா - துணுக்கு (alpha particle) : கதிரியக்கப் பொருள்கள் வெளிவிடும் மூவகைக் கதிர்களில் இது ஒன்று. ஆல்பா-துணுக்கு பரிதிய அணுவின் கருவினை யொத்திருக்கும். அதில் இரண்டு நேர் இயல் மின்னிகளும் இரண்டு பொது இயல் மின்னிகளும் அடங்கியிருக்கும் ; இரண்டு நேர் மின்னூட்டத்தையும் கொண்டிருக்கும். (பீட்டாதுணுக்கு, காமா-கதிர்களைப் பார்க்க.) இதனை ஆல்பாகதிர் என்று வழங்குவதும் உண்டு.

உட்கரு (nucleus) : கருவினைப் பார்க்க.