உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

அணுவின் ஆக்கம்

எதிர் மின்னிகளின் அமைப்பு: அணுவின் அமைப்பில் உட்கருவிற்கு வெளியே இருக்கும் எதிர் மின்னிகள் பல வட்டங்களில் கோள்நிலையில் சுற்றி வருகின்றன. இவை கடுமையான வேகத்துடன் சுற்றுகின்றன. இதனைப் பாரதியார்,

‘இடையின்றி அணுக்களெலாம் சுழலுமென
இயல்நூலார் இசைத்தல் கேட்டோம்’

என்று கூறுகின்றார். சிலவற்றின் வேகம் வினாடிக்கு அறுபதினாயிரம் மைல் வரையிலும் இருக்கிறது. மின்னிகள் விரைவாக ஓடிவருவதனால்தான் அணுவுக்குத் திடமான உருவம் ஏற்படுகிறது. ஓர் எடுத்துக்காட்டால் இவ்வமைப்பு தெளிவாகும். மிதிவண்டியின்49 மையத்திலிருந்து அதன் பரிதிக்குப் பல கம்பிகள் செல்லுகின்றன. சக்கரம் சுற்றாமல் இருக்கும்பொழுது இரண்டு கம்பிகளிடையே நம் விரலை விடலாம். சக்கரம் விரைவாகச் சுழலும்பொழுது நாம் விரலை விட முடியாது. இதைப்போலவே, எதிர் மின்னிகள் தம் ஓட்டத்தினால் அணுவிற்குத் திண்மையையும் தருகின்றன. அதனால் அணுவின் உட்கரு நன்கு பாதுகாக்கவும் பெறுகின்றது. எனவே, அணுவின் காலியிடம் நிரம்ப இருந்த போதிலும், அதற்குள் செல்வது மிகவும் சிரமம். அணுவின் அமைப்பை இதிகாசங்களில் வரும் ‘சக்ரவியூக’த்துடனும் ஒப்பிடலாம்.

கதிரவனைப் பல கோள்கள் பல மண்டலங்களில் சுற்றி வருவது போலவே, உட்கருவினைப் பல வட்டங்களில் எதிர் மின்னிகள் சுழன்றுகொண்டிருக்கின்றன. ஓர் அணுவில் ஓர் எதிர்மின்னி இருந்தால் ஒரு மின்னூட்டம் இருக்கும் ; இரண்டு எதிர்மின்னிகள் இருந்தால் இரண்டு மின்னூட்டமாகும். மின்னூட்டமாவது மின்சாரம் பாயும் அளவு. எதிர் மின்னிகளின் எண்ணிக்கை வளர வளர, அதன் மின்னூட்டமும் படிப்படியாக வளர்ந்துகொண்டே போகும். கோள்


49 மிதிவண்டி-cycle