பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
vii

எல்லை இல் பொருள்களில் எங்கும்எப் பொழுதும்
புல்விக் கிடந்து புலப்படு கின்ற
வரம்பு இல் அறிவன் இறை ; நூற் பொருள்கள்ஐந்து
உரம் தரு உயிரொடு, ஒருநால் வகைஅணு
அவ்வணு உற்றும், கண்டும் உணர்ந்திட,
பெய்வகை கூடிப் பிரிவதும் செய்யும் ;
நிலம்,நீர், தீ, காற்று என நால் வகையின
மலை,மரம், உடம்புஎனத் திரள்வதும் செய்யும் ;
வெவ்வேறு ஆகி விரிவதும் செய்யும் ;
அவ்வகை அறிவது உயிர் எனப் படுமே. [1]

என்று ஆசீவக வாதி தன் சமயத்தை எடுத்துரைப்பதைக் காண்கின்றோம். நியாய மதம், வைசேடிக மதம் என்பவையும் அணுக் கொள்கையையே பேசுகின்றன. வைசேடிக மதத் தலைவராகிய கண்ணடர் ‘அணு விழுங்கியார்’ என்றே வழங்கப்பெறுகின்றார். மேலே நாட்டில் டெமாக்கிரிட்டஸ். எபிகுயூரியஸ், லூக்ரீஷியஸ் என்பவர்களும் இக்கொள்கையினரே. இன்று உலக சமாதானமும், ஆக்கவேலைகளும் அணுவின் அடிப்படையிலேயே அமைந்திருக்கின்றன என்பதை அனைவரும் அறிவர். ஐ. நா. சபையும் அணு பற்றிய பிரச்சினைகளில்தான் அதிகக் கவனம் செலுத்தி வருகின்றது.

கடந்த இரண்டாம் உலகப் பெரும்போரில் அணு குண்டினால் உலகம் அடைந்த கேட்டினை நாம் நன்கு அறிவோம். ஹிரோஷிமா, நாகஸாகி என்ற நகர்களில் வாழும் ஜப்பானிய மக்கள் மிக நனறாக அறிவார்கள். இனி இத்தகைய கேடு உலகிற்கு ஏற்படக்கூடாது ஏன்று அருளுள்ளம் படைத்த அறிஞர்கள் நெஞ்சம் கவல்கின்றனர். அணுவினை ஆக்கத்திற்கு மட்டிலுந்தான் பயன்படுத்த வேண்டும் என்று விழைகின்றனர். அணுவாற்றலை எந்தெந்தவகைகளில் ஆக்கவேலைகட்குப் பயன்படுத்தலாம் என்று உலகிலுள்ள அறிவியலறிஞர்கள் அனைவரும் ஆராய்ந்துவருகின்றனர்.


  1. சமயக் கணக்கர்தம் திறம் கேட்ட காதை-வரி 110-19.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அணுவின்_ஆக்கம்.pdf/8&oldid=1223644" இலிருந்து மீள்விக்கப்பட்டது