பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
viii

நவீன அறிவியல் கருத்துக்களைத் தமிழில் எழுதிப் பரப்ப வேண்டும் என்ற எண்ணம் யான் கல்லூரியில் படித்த காலத்திலிருந்தே-சுமார் இருபது ஆண்டுகட்கு முன்னரே உண்டு. பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களை மொழி பெயர்த்தும், இறவாத புது நூல்கள் இயற்றியும்தான் தமிழை வளர்க்கவேண்டும். அதுவே தமிழ் மொழியின் ஆக்கத் திற்குச் சிறந்த வழி; இன்றியமையாத போக்கு.

புத்தம் புதிய கலைகள்-பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும் ;
மெத்த வளருது மேற்கே-அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.

என்ற குறை தமிழுக்கு இருத்தல் கூடாது. கல்லூரிகளிலும் தாய்மொழி வாயிலாகக் கல்வி பயிற்றப்பெறும் வாய்ப்பு ஏற்படுகின்ற காலத்தில்தான் உயர்ந்த அறிவியல் நூல்கள் தமிழில் பெருக வழி அமையும். இந்தத் துறையில் ஓரளவு பணியாற்ற வேண்டும் என்பது எனது அவா. ஆங்கில மொழிக்கும் தமிழ் மொழிக்கும் தக்க கலைச்சொற்களைக் கொண்டு பாலம் - சேது - அமைத்துவிட்டால் ஆங்கில மொழியிலிருந்து ஏராளமான “கருத்துச் சரக்குகள்” தமிழுக்கு வந்து சேரும். அறிஞர்கள் செய்துவரும் இப்பணியில் எனது முயற்சி சேது கட்டியபொழுது ஒரு சிறு அணில் மேற்கொண்ட முயற்சியைப் போன்றது. எனது சிறு முயற்சியை அறிஞர் உலகம் பாராட்டி ஆசி கூறுமாயின் அதுவே யான் பெற்ற பேறு; அந்தச் சிறு அணில் இராகவனால் ஆசி பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியைப்போல் யானும் மகிழ்ச்சியடைவேன். இத்துறையில் “தெளிவுறவே அறிதலுக்கும், தெளிவுதர மொழிந்திடுதலுக்கும்” தமிழ் வாணியின் அருள் வேண்டும்; பெரியோர்களின் ஆசியும் வேண்டும்.

இந்த நூல் அணுவினே ஆக்கத்துறைகளில் பயன்படுத்தும் முறைகளை விளக்க எழுந்தது. புத்தகம் 16 அத்தியாயங்களாகப் பிரிக்கப்பெற்றிருக்கின்றது. முதல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அணுவின்_ஆக்கம்.pdf/9&oldid=1223660" இலிருந்து மீள்விக்கப்பட்டது