பக்கம்:அண்டகோள மெய்ப்பொருள்.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஸ்ரீமதே ராமாநுஜாயநம

Larger

முகவுரை

"அண்ட கோளத்தாரனு" என்ற பாசுரம், ஆழ்வார் சங்கத்தார்க்கு எழுதிய அகவல் என்ற தலைக்குறிப்புடன், ஆழ்வார் திருநகரித் தாயவலந்தீர்த்தான் கவிராயரவர்கள் வீட்டிற்கிடைத்த ஒற்றையேட்டில் முதன்முதல் என்னாற் காணப்பட்டது. அதனை மதுரைத் தமிழ்ச்சங்கத்துச் செந் தமிழ்ப் பத்திரிகை தொகுதி 3, பக்கம் 405ல் வெளியிட்டுள்ளேன். அப்பாசுரத்துக்கு அக்காலத்துப் பொருள்காண்டல் அரிதாயிருந்தமையால் இதன் பொருள் இப்போது நன்கு விளங்கவில்லை என்ற குறிப்பும் ஆங்குத் தரப்பட்டுள்ளது. அப்பாசுரத்தைப் பற்றி நெடுங்காலம் யான் சிந்தித்து வந்ததில், சிலவாண்டுகட்குமுன் அதன் உண்மைப் பொருள் இஃதென்பதை உணரலாயினேன். அப் பாசுரத்தின் சொற்ருெடர்ப் பொலிவினையும், அதனு ளடங்கிய அரிய பெரிய வடமொழிப் பொருளின் மாட்சியையும் நோக்குமிடத்து அஃது ஆழ்வார் அருளிச் செயலாதற்குரிய எல்லாத் தகுதியும் வாய்ந்தது என்று சொல்லத் தடையில்லை. சங்கப்புலவர்கள் தம்மைப் பெரிதும் மதிக்கும்படி ஆழ்வார் செய்வித்த செய்தியைக் குரு, பரம்பரை நூல்களும், 'அண்டகோளத்தாரென்னு மாரியத் தமிழா லன்று, தண்டமிழ்ச் சங்கம் வென்ற சடகோபர் (கடவுள் வணக்கம், 13) என இற்றைக்குச் சில நூற்றாண்டுகட்கு முற்பட்டவராகத் தெரியும் கூடற்புராண ஆசிரியரும் கூறுவது, ஆழ்வார் அருளியதே இப்பாசுரம் என்பதை வலியுறுத்தல் காணலாம்.