பக்கம்:அண்டகோள மெய்ப்பொருள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அண்டகோள மெய்ப்பொருள்

9

யால் விசேடித்தார். பூத்த மரம் என்புழிப் பூத்த பெருமையும் எழிலும் ஒருமையும் மரத்தின் கண்ணே நிலைபெறுதலெளிதி லுணரத் தகும். மரத்தின் அவயவமாகிய கொம்பு, இலை, பூ, காய், கனி முதலிய எவையும் மரத்தின் வேறாகாத் தன்மையால் ஒருமை நன்கறியலாகும். இவ்வொருமையினையே கம்பநாடர்

“அம்போ ருகனா ரரனா ரறியார்
எம்போ லியரெண் ணுறினென் பலவாம்
கொம்போ டடைபூக் கனிகா யெனினும்
வம்போ மரமொன் றெனும்வா சகமே.”

                                          
(இராமா. இரணியன்வதை, 111)

என்பதனால் இனிது விளக்கினார். இவர்க்கு இவ்வாழ்வாருடைய இத்திருப்பாட்டு நோக்கென்பதும் பொருந்தும். “சங்கக் குவடிறக் குத்திய மாறப் பெயர்க்கொலையானை” எனச் சடகோபரந்தாதியில், ஆழ்வார் சங்கம் வென்றருளிய செய்தியை வெளியிடுதலான் இஃது உணரலாம். ஶ்ரீ பாகவதம் “தருவினடியில் நீர்விடுவது அதன் கொம்பு கிளைகட்கு எங்ஙனமாகுமோ, அங்ஙனமே விஷ்ணுவின் ஆராதனம் எல்லாப் பிராணிகட்கும் பயன்படுவது”(அத்-ரு-௪௯) என்று கூறுதலான், மரமும் கிளைகளும் போலப் பரதெய்வமும் பிராணிகளு முண்மை நன்கறிந்துகொள்க. இந்தப் பாகவதத்தாற்கருதிய ஒருமையையே ஆழ்வார் திருவுளம் பற்றினாரென்பது, பூத்த என்னும் வினையாற் பிண்டங்களை மலர்களாக்கியதனானும், அம்மலர்களை யுண்டாக்கிப் பரிபாலிக்குநிலையில் மலரின் வேறாகாத மரமாகப் பரதெய்வத்தை உருவகப்படுத்திய தனானும் இனிது துணியலாம். இவ்வொருமை ரக்ஷ்யரக்ஷகபாவாதி ஸம்பந்தத்தாலுள தாவதல்லது ஸ்வரூபஐக்யமாகாமை உய்த்துணர்ந்துகொள்க.